பயன்பாட்டில் இல்லாத குவாரிகளை மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்ற வேண்டும் ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இல்லாத குவாரிகளை மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், சுற்றுச்சூழலும், சூழலியலும் பாதிக்காமல் சுரங்கப் பணிகளை மேற்கொள்ள நிலையான கொள்கையை உருவாக்க வேண்டும் என்றார்.
பயன்பாடற்று கிடக்கும் கல்குவாரிகளால் பொதுமக்கள், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் கூறினார். தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் வருவாயினை அடுத்த ஐந்தாண்டுகளில் 250கோடி அளவுக்கு உயர்த்தவும், சிவகங்கை மாவட்டத்தில் கிடைக்கும் கிராபைட்டில் இருந்து அதிக செறிவூட்டப்பட்ட உயர்தர கிராபைட் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப முறை குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
அடுத்த 3 வருடத்தில் கூடுதல் சுரங்க பகுதிகளை பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், உலகத் தரம் வாய்ந்த ஆலோசகரை நியமித்து உற்பத்தி திறனை அதிகரிக்கவும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்திற்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
Comments