மழை வெள்ளம் நிலச்சரிவு... மகாராஷ்டிரத்தில் 76 பேர் பலி.. மீட்புப் பணிகள் மும்முரம்

0 2615
மகாராஷ்டிரத்தில் மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 76 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தினருடன் தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும், கடற்படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 76 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தினருடன் தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும், கடற்படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட், ரத்தினகிரி, சதாரா உள்ளிட்ட மாவட்டங்களில் பல நாட்களாகத் தொடர்ந்து பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்தது. ராய்காட் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் மகத், தாலியே உள்ளிட்ட 6 ஊர்களில் கனமழையால் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டதில் பல வீடுகள் மண்ணில் புதைந்தன. அப்பகுதிகளில் நாற்பதுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோலாப்பூர் மாவட்டத்தில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித் தவித்தவர்களை ரப்பர் படகுகளின் உதவியுடன் மீட்டுக் கரைசேர்த்து வருகின்றனர்.

ரத்தினகிரி, ராய்காட் மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக்கொண்டதையடுத்து மும்பையில் இருந்து கடற்படையின் 7 அணிகள் அனுப்பப்பட்டுள்ளன. மீட்புப் பணிக்காக ஹெலிகாப்டரும் அனுப்பப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம், கோவா மாநிலங்களில் மீட்புப் பணிகளில் உதவுவதற்காக ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் இருந்து தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் 170 பேர் விமானப்படை விமானம் மூலம் புறப்பட்டனர்.

கோலாப்பூர், சாங்லி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கால் மும்பை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சரக்குகளை ஏற்றி வந்த லாரிகள் சாலையில் நெடுந்தொலைவுக்கு வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. செல்பேசித் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தொண்ணூறாயிரம் பேர் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 76 பேர் உயிரிழந்ததாகவும், 38 பேர் காயமடைந்துள்ளதாகவும், 30 பேரைக் காணவில்லை என்றும் மீட்பு மற்றும் மறுவாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்தோரில் 8 பேருக்கு மும்பை ஜேஜே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments