இந்தியாவுக்கு முதல் பதக்கம் வெள்ளி வென்றார் மீராபாய் சானு
டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார். அவர் மகளிர் பளு தூக்கும் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பளு தூக்கும் போட்டி 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு இறுதிச் சுற்றில் 84 கிலோ, 87 கிலோ எடைகளை வெற்றிகரமாகத் தூக்கினார்.
89 கிலோ எடையைத் தூக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை.
அதேநேரத்தில் சீன வீராங்கனை ஹூ சிகு 94 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கம் வென்றார். அவர் ஒலிம்பிக்கில் புதிய சாதனையையும் படைத்துள்ளார். இரண்டாமிடம் பெற்ற இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் பதக்கமாகும்.
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மீராபாய் சானு 2017ஆம் ஆண்டு உலகச் சாம்பியன்ஷிப் போட்டியிலும், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கங்கள் வென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.
Comments