அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலி பணி நியமன ஆணை வழங்கியவர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரம் செய்து 76 பேருக்கு போலியான பணி ஆணை வழங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்தவனை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அம்மையார்குப்பத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் வேலை தேடிக் கொண்டிருந்தார்.
அப்போது முகநூலில் அரசு வேலை காலியிடம் இருப்பதாக அறிந்தவுடன், அதில் கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணில் பேசியுள்ளார், அப்போது பேசிய நபர், சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் வேலை இருப்பதாகவும், அதற்காக 54,350 ரூபாய் தனது வங்கி கணக்கில் செலுத்தக் கூறியுள்ளார்.
அவருடைய வங்கிக் கணக்கில் வெங்கடாசலம் அந்தப் பணத்தைச் அனுப்பிய பின், அந்த நபர் தன்னுடைய தொலைபேசியை ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த வெங்கடாசலம், திருவள்ளுர் சைபர் கிரைம் போலீசாரிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவனை போலீசார் கைது செய்தனர்.
அவனிடம் நடத்திய விசாரணையில், 2019 முதல் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் வேலை வாங்கி தருவதாக போலியான பணி ஆணை அளித்து பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
Comments