போங்கு... போங்கு... போங்கு; சூதாட்டத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்..! மறுபடியும் சூதே வெல்லும்

0 4610

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே காரை மறித்து, சூதாட்டத்தில் ஜெயித்த 11 லட்சம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்த 6 பேர் கும்பலை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். வழிப்பறி செய்தவர்களிடம், நெடுஞ்சாலை மேம்பாலத்தில் போங்காட்டம் ஆடி, பாதிப் பணத்தை மீட்ட ஹார்டுவேர் கடைக்காரர், போலீசார் விசாரணைக்குப் பின், சூதாட்டத்தின் வாழ்வுதனை சூது கவ்வியதையும் மறுபடியும் சூது வென்ற கதையையும் ஒப்புக் கொண்ட பின்னணி குறித்து விவரிக்கும் செய்தித் தொகுப்பு...

வாணியம்பாடி அருகே காரில் வந்தவர்களை வழிமறித்து ரூபாய் 11 லட்சம் வழிப்பறி செய்யபட்டதாக வந்த புகாரை விசாரிக்க, சம்பவ இடத்திற்கு போலீசார் நேற்றிரவு சென்றனர். அங்கு, சூது வாது தெரியாதவர் போல, வழிப்பறி சம்பவத்தை விவரித்த இவர் பெயர் ஞானசேகரன்...

காவல் நிலையத்திற்குள் விசாரணைக்கு சென்று வந்த பிறகு, அதே ஞானசேகரன் சம்பவம் குறித்து கூறிய வெர்சன் இது..

சூதாட்டத்தில் ஏற்கெனவே விட்ட பணத்தை பிடிக்க, குடியாத்தம் சென்று சூதாடி 22.5 லட்சம் ரூபாய் வென்ற களிப்புடன், திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளிக்கு காரில் திரும்பிய ஞானசேகரனை, கர்நாடக பதிவெண் கொண்ட காரில் வந்தவர்கள் வாணியம்பாடி அருகே வழிமறித்துள்ளனர். காரின் குறுக்கே காரை நிறுத்தி, ஆயுதங்களுடன் இறங்கிய கும்பல், ஞானசேகரனை அடித்து உதைத்து மொத்த பணத்தையும் பிடுங்கியுள்ளது.

அப்போது சூதாட்ட மூளை ஞானசேகரனுக்கு கைகொடுத்துள்ளது. வழிப்பறி கும்பல் வந்த காரில் இருந்த சாவியை, தனது டிரைவர் மூலம் எடுத்த ஞானசேகரன், அதை துருப்புச் சீட்டாக வைத்து வழிப்பறி கும்பலிடம் பேரம் பேசியுள்ளார். கார் சாவியை கொடுத்துவிட்டால் பணம் மொத்தத்தையும் திரும்பத் தந்துவிடுவதாக வழிப்பறிக் கும்பல் கூறியுள்ளது.

சூதாட்டத்தில் ஹார்ட்டின் எதிர்பார்த்தவர்களுக்கு ஸ்பேடு இறங்கியது போல, ஒரு பையில் இருந்த பணத்தை வாங்கியவுடன், மேம்பாலத்திற்கு கீழே இருட்டில் கார் சாவியை வீசி எறிந்துள்ளார் ஞானசேகரன். எதிர்பாராத இந்த போங்காட்டத்தால் திகைத்த வழிப்பறிக்கும்பல் கையில் இருந்த மற்றொரு பணப்பையை எடுத்துக் கொண்டு, காரை அங்கேயே விட்டுவிட்டு, தப்பி ஓடிவிட்டதாகக் கூறுகிறார், ஞானசேகரன்.

தகவலறிந்து போலீசார் வந்தபோது, சூதாட்ட விவகாரத்தை மறைத்துவிட்டு, ஃபைனான்ஸ் பணம் என கதையளந்த ஞானசேகரன், போலீசார் விசாரித்த பிறகு உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். தப்பி ஓடிய கும்பல் விட்டுச் சென்ற காரில் இருந்த கர்நாடக பதிவெண் போலியான ஸ்டிக்கர் என்பதை கண்டறிந்த போலீசார், உண்மையான பதிவெண்ணை வைத்து சில விஷயங்களை துப்பு துலக்கியுள்ளனர்.

தப்பி ஓடியவர்களில் ஒருவன், பத்திரிக்கையாளர் அடையாள அட்டை ஒன்றை விட்டுச் சென்றுள்ளான். குற்றவாளிகளை பிடித்த பின்னர் மற்ற விவரங்களை தெரிவிப்பதாக போலீசார் கூறியுள்ளார். தப்பி ஓடிய 6 பேர் கும்பலை பிடித்த பின்னரே, ஞானசேகரன் கூறிய விவரங்கள் உண்மையா, இல்லை போலீசாரிடமும் போங்காட்டம் ஆடியுள்ளாரா என்பது தெரியவரும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments