பத்திரப் பதிவு அலுவலக சேவை வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
பத்திரப்பதிவு அலுவலகங்களின் சேவையானது மக்களுக்கு ஏற்ற வகையில் எளிதானதாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வணிக வரி மற்றும் பதிவுத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வணிகவரி மற்றும் பத்திரத்துறையில் வரி வருவாய் இலக்கினை முழுவதும் எய்திட முனைப்புடன் செயல்பட வேண்டும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். இந்தத் துறை தொடர்பான புகார்களைத் தெரிவிக்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை வாயிலாக பெறப்படும் புகார்கள் எவ்விதத் தொய்வுமின்றி தீர்வு காணப்பட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
பொதுமக்களுக்கு நல்ல திட்டங்களைச் செயல்படுத்த வரி வருவாய் அவசியமானது என்பதால் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் கண்காணித்து, அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரியினை வசூலிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
பத்திரப்பதிவு அலுவலகங்களின் சேவையானது மக்களுக்கு ஏற்ற வகையில் எளிதானதாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் அமையவேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார். இந்தக் கூட்டத்தில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
Comments