கூட்டுப் பாலியல் வன்கொடுமை தற்கொலைக்கு முயன்ற சிறுமி
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 14 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டிய இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
தனக்கு நேர்ந்த கொடுமை ஊருக்குள் தெரிந்ததால் அவமானத்தில் அந்தச் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாவக்கல்லைச் சேர்ந்த அஜித்குமார் என்பவன், தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த 14 வயதான தனது உறவுக்காரச் சிறுமியை காதலிப்பதாகக் கூறி தனியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
அப்போது அங்கு வந்த பெத்தூரைச் சேர்ந்த விஜய், தியாகு ஆகியோர் அஜித்குமாரை மிரட்டி விரட்டிவிட்டு, சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளனர். அதனை தங்களது மொபைலில் வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்ட அவர்கள், வெளியே சொன்னால் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
சம்பவம் ஊருக்குள் மெல்ல கசிந்து, சிலர் சிறுமியை அணுகி நடந்தவை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அவமானத்தில் மனமுடைந்த சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
அவரை காப்பாற்றிய தாய், போலீசில் புகாரளித்த நிலையில், விஜயையும் தியாகுவையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
சிறுமியை ஏமாற்றி அழைத்து வந்து கொடுமைக்கு உள்ளாக்கிய அவரது உறவினர் அஜித்குமாரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு வரும் உறவினராக இருந்தாலும் சரி, புதிய நபர்களாக இருந்தாலும் சரி, அவர்களுடைய நடவடிக்கைகளை பெற்றோர் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று கூறும் மனோதத்துவ நிபுணர்கள், தங்களது உள்ளுணர்வுக்கு தவறாகத் தோன்றினால் அவர்களிடமிருந்து குழந்தைகளை விலக்கி வைக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
அத்துடன் சரியான தொடுதல் எது, தவறான தொடுதல் எது என்பதை எல்லாம் பெண் குழந்தைகளுக்கு எடுத்துரைத்து, சுய பாதுகாப்பை அவர்களே வகுத்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இதுபோன்ற கொடுமைகள் நேராமல் பெண் குழந்தைகளை காப்பது ஒருபுறம் இருந்தாலும் மீறி அசம்பாவிதம் நடந்துவிட்டால் அதனை ஒரு விபத்தாகக் கருதி மறந்துவிட்டு வேறு விஷயங்களில் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்றும் அதன் காரணமாக அவர்களை தற்கொலை போன்ற விபரீத எண்ணங்களில் இருந்து மீட்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
Comments