டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா கோலாகலம்..!
32 ஆவது ஒலிம்பிக் போட்டியை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அந்நாட்டின் மன்னர் நருகிட்டோ தொடக்கி வைத்தார். தொடக்க விழாவில் வாண வேடிக்கைகள், கலைநிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.
ஜப்பான் மன்னர் நருகிட்டோ, ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தாமஸ் பேக் மற்றும் குழுவினர் ஜப்பானிய கொடியுடன் அரங்கத்துக்குச் சென்றனர்.
அதன்பின் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி முறைப்படி போட்டி தொடங்கி வைக்கப்பட்டது.
தொடக்க விழாவில் நிகழ்த்தப்பட்ட வண்ணமயமான வாணவேடிக்கைகளை அரங்கில் இருந்த பார்வையாளர்கள் நேரில் கண்டுகளித்தனர்.
ஜப்பானிய நடனக் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளும் பார்வையாளர்களுக்கு விருந்தளித்தன.
ஒவ்வொரு நாட்டுக் குழுவினரும் தங்கள் கொடிகளை ஏந்தியபடி அரங்கில் பெருமையுடன் வலம் வந்தனர். 127 பேர் கொண்ட இந்திய குழுவினருக்குக் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், ஆக்கி அணித் தலைவர் மன்பிரீத் சிங் ஆகியோர் கொடிபிடித்துத் தலைமையேற்றுச் சென்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன் உள்ளிட்ட சிலநூறு பேரே அனுமதிக்கப்பட்டனர். ஆகஸ்டு 8 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.
Comments