3 மாநிலங்களில் கனமழை : ஆறுகளில் வெள்ளப் பெருக்கு மீட்புப் பணிகள் மும்முரம்

0 2426
3 மாநிலங்களில் கனமழை : ஆறுகளில் வெள்ளப் பெருக்கு மீட்புப் பணிகள் மும்முரம்

கர்நாடகம், மகாராஷ்டிரம், தெலங்கானா மாநிலங்களில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தில் சிக்கித் தவிப்போரை மீட்கும் பணிகளில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் உட்புறப் பகுதிகளிலும் தென்மேற்குப் பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.

இதனால் கர்நாடக மாநிலம் கார்வாரில் உள்ள கத்ரா அணையில் இருந்து நொடிக்கு நாற்பதாயிரம் கன அடி நீர் காளி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தின் சதாரா மாவட்டத்தில் கனமழையால் கொய்னா ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் பாய்கிறது. பல இடங்களில் ஆற்றுவெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளதால் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. 

கோலாப்பூர் மாவட்டம் சிக்காலியில் வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் வீடுகளில் சிக்கித் தவித்தவர்களைத் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ரப்பர் படகுகள் மூலம் மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சேர்த்தனர். 

நாக்பூர் மாவட்டம் ஹிங்க்னா என்னுமிடத்தில் வேணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாயும் நிலையில் ஆற்றின் நடுவே உள்ள கோவிலில் சிக்கித் தவித்தவரை மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் ரப்பர் படகு மூலம் மீட்டனர்.

ராய்காட் மாவட்டத்தில் மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 36 பேர் உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தெலங்கானா மாநிலத்தில் தொடர் கனமழையால் சிரிசில்லா மாவட்ட ஆட்சியரக வளாகம் முழுவதும் முழங்காலளவு தண்ணீரில் மூழ்கியுள்ளது. குமுரம் பீம், ஜக்தியால், வாரங்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  

நிசாமாபாத் மாவட்டம் சாவேல் என்னும் ஊரில் வெள்ளத்தில் மூழ்கிய முதியோர் இல்லத்தில் இருந்து 7 பேரை ரப்பர் படகின் உதவியுடன் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்டுக் கரை சேர்த்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments