ஏங்க வந்துடுங்க… வந்துடுங்க.. கதவை தட்டி கண்ணீருடன் கலங்கிய மனைவி…

0 6068
ஏங்க வந்துடுங்க… வந்துடுங்க.. கதவை தட்டி கண்ணீருடன் கலங்கிய மனைவி…

கன்னியாகுமரியில் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக் கூறி அவரது வீட்டுக்கு முன் மனைவி கத்தி கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது.

கேட்பார் பேச்சைக் கேட்டு வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டு கதவை சாத்திக் கொண்ட கல் நெஞ்சம் படைத்த கணவனுக்காக சாலையில் உருண்டு புரண்ட மனைவி

இப்படி கணவர் வீட்டு முன்பு கத்தி கதறி கலங்கி நிற்பவர் குழித்துறை அடுத்த திருத்துவபுரத்தைச் சேர்ந்த மொழிப்போர் தியாகி ஜேம்ஸின் மகள் பிரியதர்ஷினி.

வழக்கறிஞரான பிரியதர்ஷினிக்கும், முளகுமூடு பகுதியைச் சேர்ந்த உதவி பேராசிரியரான ராஜ ஷெரினுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடந்துள்ளது.

பெண் வீட்டார் சார்பில் 101 சவரன் நகையும், 5லட்ச ரூபாய் பணத்தோடு, 2கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் வரதட்சனையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

திருமணமான ஆரம்பத்தில் மனைவியிடம் பாசமாகவும், கனிவுடனும் நடந்து கொண்ட ராஜ ஷெரின், பின்னர் பெண்களுடனான தவறான தொடர்பால் மனைவியை விட்டு ஒதுங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது.

அத்தோடு, கூடா நட்பு கேடா முடியும் என்பதற்கு ஏற்ப பெண்கள் சவகாசத்தால் பெருமளவு பணத்தை இழந்து கடனில் சிக்கிய ராஜ ஷெரினும், அவனது குடும்பத்தினரும் கடனை சமாளிக்க பிரியதர்ஷினியை பெற்றோர் வீட்டில் இருந்து மேலும் 100 சவரன் நகைகளையும், சொத்துகளை எழுதி வாங்கி வரச் சொல்லி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

தனது குடும்பத்தினர் மனைவிக்கு கொடுத்த துன்புறுத்தல்களை கண்டுகொள்ளாமல் இருந்த ராஜ ஷெரின் குறித்து பிரியதர்ஷினி மார்த்தாண்டம் போலீசில் புகாரளித்துள்ளார்.

இதனையடுத்து, சட்ட ஆலோசகர் அறிவுரையின் பேரில் கோணம் அருகே தனியாக வீடு எடுத்து ராஜ ஷெரினும், பிரியதர்ஷினியும் குடியேறியுள்ளனர்.

இந்த நிலையில் தான், சென்னையில் தனக்கு அதிக ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது, வேலையில் சேர்ந்தவுடன் உன்னை சென்னைக்கு அழைத்துச் செல்கிறேன் என பிரியதர்ஷினியிடம் கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்ற ராஜ ஷெரின் அதற்கு அப்புறம் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை.

தொலைபேசி மூலம் பல முறை தொடர்பு கொள்ள முயன்ற பிரியதர்ஷினி, சில நாட்கள் தனியாக போதிய உணவின்றி வாழ்ந்து வந்துள்ளார்.

இதனிடையே வியாழக்கிழமை இரவு வீட்டுக்கு வந்த ராஜ ஷெரின், சில மணி நேரங்களிலேயே புறப்பட்டுச் சென்ற நிலையில், கணவனை தேடி அவரது பெற்றோர் வீட்டுக்கு வந்த பிரியதர்ஷினி, கணவனை பார்த்து நியாயம் கேட்டுள்ளார்.

அதற்கு, ராஜ ஷெரின் குடும்பத்தினருடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை சாத்திவிட்டதாக கூறப்படுகிறது.

செய்வதறியாமல் தவித்த பிரியதர்ஷினி, கணவர் வீட்டுக்கு முன் நின்று கதறி, கதறி அழுதார். இன்னும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் பெற்றோரிடம் இருந்து வாங்கி வருகிறேன், தன்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என பூட்டிய வீட்டுக்கு முன் பிரியதர்ஷினி கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது.

மழைக்கு இடையிலும் நடுரோட்டில் உருண்டு, புரண்டு கணவரை தன்னுடன் சேர்த்து வையுங்கள் என பிரியதரிஷினி மன்றாடினார்.

பிரியதர்ஷினியின் போராட்டத்திற்கு அந்த வீட்டில் இருந்த ஒருவர் கூட செவி சாய்க்கவில்லை. கடைசி வரை வீடு பூட்டியே இருந்தது. பின்னர், சம்பவ இடத்திலிருந்த போலீசார் பிரியதர்ஷினியை சமாதானப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டுக்குள் இருந்த ராஜ ஷெரின் பின் வாசல் வழியாக தப்பியோடிவிட்டதாகவும், அவரை கண்டுபிடித்து விசாரணை நடத்தி பெண்ணுக்கு நியாயம் கிடைக்கச் செய்யப்படும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments