காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போலீசார் துப்பாக்கிச் சண்டை; பயங்கரவாதிகள் இருவர் பலி..! டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது
ஜம்மு காஷ்மீரின் சோப்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது லஸ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அக்னூரில் வெடிகுண்டுகளைச் சுமந்து வந்த ஆளில்லா விமானத்தைக் காவல்துறையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் சோப்பூரில் தீவிரவாதிகளின் பதுங்கிடத்தில் ராணுவத்தினர், எல்லைப் பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நிகழ்ந்த மோதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தோரில் ஒருவனான பயாஸ் வார் என்பவன் பல்வேறு தாக்குதல் மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புள்ளவன் எனக் கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் அக்னூரில் நள்ளிரவில் டிரோன் பறந்து வந்தது குறித்துக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவுக்குள் இந்தியாவுக்குள் வந்த அந்த டிரோனைக் கனாச்சக் என்னுமிடத்தில் காவல்துறையினர் சுட்டு வீழ்த்தினர்.
பாகிஸ்தானில் இருந்து வந்ததாகக் கூறப்படும் அந்த டிரோனில் 5 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகள் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments