பதக்கம் வெல்லும் முனைப்பில் இந்தியா..! தங்கம் வெல்ல களமிறங்கிய சிங்கங்கள்

0 3582

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் முனைப்புடன் இந்திய வீரர்- வீராங்கனைகள் களம் காணுகின்றனர். பதக்கம் வென்று பெருமை சேர்க்கத் துடிக்கும் இந்திய போட்டியாளர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

32-வது ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய தரப்பில் 125 வீரர், வீராங்கனைகள் டோக்கியோ சென்றுள்ளனர். 130 கோடி இந்திய மக்களின் பிரதிநிதிகளாக டோக்கியோ சென்றுள்ள இந்திய குழு பதக்கம் வெல்லும் முனைப்புடன் களம் காண உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் முன்னெப்போதும் இல்லாத அளவாக, 125 வீரர்- வீராங்கனைகள் 18 விளையாட்டுகளில் இடம்பெற்றுள்ளனர்.

2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு வெள்ளி பதக்கமும், மல்யுத்தத்தில் ஷாக்சி மாலிக் வெண்கலப் பதக்கமும் கிடைத்தது. அதனால், இந்திய வீரர்- வீராங்கனைகள் இம்முறை அதிக பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளுக்கும் 75 லட்ச ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. இதுதவிர மாநில அரசுகளும் ஊக்கத்தொகைகளை அறிவித்துள்ளன.

தமிழகம் சார்பில் வாள்வீச்சு போட்டியில் பவானி தேவியும், துப்பாக்கி சுடுதலில் இளவேனில் வாலறிவன், டேபிள் டென்னிசில் சரத் கமல், சத்யன் ஞானசேகரன் இடம்பெற்றுள்ளனர். படகு போட்டியில் விஷ்னு சரவணன், வீராங்கனை நேத்ரன் குமரன், குழுப் போட்டியில் ஆகியோர் பங்கேற்பார்கள். 400 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர் ஆரோக்கிய ராஜீவ், தடகள வீராங்கனைகள் தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன், ரேவதி வீரமணி ஆகியோரும் நம்பிக்கை நட்சத்திரங்களாக சென்றுள்ளனர்.

நடப்பு டோக்கியோ ஒலிம்பிக் தொடரை இந்திய தரப்பில் ஏறத்தாழ 9 வீரர், வீராங்கனைகள் தவறவிட்டு உள்ளனர். தரவரிசை பின்தங்கல் காரணமாக பேட்மிண்டனில் சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோரும், கொலை வழக்கில் சிக்கிய சுஷில் குமார், ரியோ ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற ஷாக்சி மாலிக் ஆகியோரும் இம்முறை பங்கேற்கவில்லை.

குத்துச்சண்டை வீரர் சிவா தாப்பா, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை Dipa Karmakar ஆகியோரும், காயம் காரணமாக 100 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை ஹீமா தாசும் விலகியுள்ளனர். டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை Heena Sidhu ஆகியோரும் ஒலிம்பிக் போட்டிக்கான அணியில் இடம்பெறவில்லை.

இந்திய போட்டியாளர்களில் துப்பாக்கி சுடுதலில் இளவேனில் வாலறிவன், பேட்மிண்டனில் பி.வி.சிந்து, ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா, மல்யுத்தத்தில் வினேஷ் போகத் உள்ளிட்ட வீரர்- வீராங்கனைகள் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழ்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments