மகாராஷ்ட்ரா, தெலங்கானாவில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு..! வெள்ளம் சூழ்ந்துள்ள வீடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்
மகாராஷ்ட்ராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், மும்பை, புனே, நாசிக் போன்ற நகரங்களில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மும்பையின் மெரீன் டிரைவ் , கேட்வே ஆப் இந்தியா பகுதிகளில் கடல் பெரும் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
ரத்னகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் அங்குள்ள இரண்டு ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நிலச்சரிவுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததையடுத்து அப்பகுதியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ராய்காட் மாவட்டத்திலும் கனமழைக்கு 3 பேர் பலியானார்கள். ராணுவம் அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.தானே பால்கர் பகுதியிலும் 3 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி மத்திய அரசு உதவும் என்று உறுதியளித்துள்ளார்.
இதே போல் தெலுங்கானாவில் பலபகுதிகளிலும் இடைவிடாது மழை கொட்டியதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோரம் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த கடும் வெள்ளத்திலும் சில மீனவர்கள் நிர்மல் பகுதியில் மீன்பிடித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பரவின.
கர்நாடகத்தின் காளி ஆற்றிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கார்வார் பகுதியில் உள்ள கட்ரா அணையில் இருந்து அதிகாரிகள் 40 ஆயிரம் கன அடியைத் திறந்து விட்டதால் ஆற்றில் வெள்ளம் அதிகரித்தது.
Comments