கிறிஸ்தவ காப்பகத்தில்.. அறியாப் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை..! 67 வயது காமுகன் கைது
மதுரை அருகே கிறிஸ்தவ சேவா சங்கத்தின் கட்டண காப்பகத்தில் மன வளர்ச்சி குன்றிய பெண்ணை 7 முறை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கி அதனை மறைக்க உடல் நலக்கோளாறு என்று நாடகமாடிய கொடுமை அரங்கேறியுள்ளது. 67 வயது காப்பக ஊழியரை காப்பாற்ற பெண்ணின் உறவினர் மீது பழி போட்ட படுபாதக சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
மதுரை முத்துப்பட்டி பகுதியில் கென்னட் அறக்கடைளைக்கு சொந்தமான கிறிஸ்தவ சேவா சங்கம் என்ற ஆதரவற்றோர் மற்றும் மன வளர்ச்சி குன்றியோருக்கான கட்டண காப்பகம் இயங்கி வருகின்றது. இந்த காப்பகத்தை கடந்த 21 வருடமாக ராஜசேகர் உள்ளிட்ட 10 பேரை கொண்ட நிர்வாக குழு நடத்திவருகின்றது.. இந்த காப்பகத்தில் மன வளர்ச்சி குன்றிய 45 வயது மதிக்க தக்க பெண் ஒருவரை கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக அவரது தாய்மாமா மற்றும் அந்த பெண்ணின் சகோதரர் ஆகியோர் கொண்டு வந்து சேர்த்தனர்.
தாய் தந்தை இருவரும் இறந்து போனதால் கவனிப்பாறின்றி தவித்த மனவளர்ச்சி குன்றிய தனது தங்கையை இந்த காப்பகத்தில் சேர்த்த சகோதரர், ஓட்டலில் வேலை பார்த்து மாதந்தோறும் 1500 ரூபாய் கட்டணம் செலுத்தி பராமரித்து வந்தார். இவர்களுக்கு தாய்மாமா பக்கபலமாக இருந்துள்ளார். வருடத்திற்கு இரு நாட்கள் மட்டும் அந்த பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்து செல்வது இவர்களது வழக்கம் என்று கூறப்படுகின்றது. ஒன்று பொங்கல் பண்டிகை, மற்றொன்று அந்த பெண்ணின் பெற்றோரின் நினைவு நாள் ஆகும்.
வழக்கத்துக்கு மாறாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த பெண்ணின் சகோதரர் மற்றும் தாய்மாமாவை அழைத்த காப்பக நிர்வாகி ராஜசேகரன், உங்கள் பெண்ணுக்கு உடலில் ஏதேதோ மாற்றம் காணப்படுகின்றது. சாப்பிட்டால் வயிறு ஊதுகிறது வீட்டுக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார். அவர்களும் முறையாக காப்பகத்தில் எழுதிக்கொடுத்து விட்டு வீட்டுக்கு அழைத்துச்சென்றுள்ளனர். வீட்டில் உள்ள பெண்களின் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொண்டதில் மனவளர்ச்சிக் குன்றிய அந்தப்பெண் 9 மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து செய்வதறியாமல் திகைத்து போன அந்த பெண்ணின் சகோதரர் இது குறித்து மதுரை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த பெண்ணிடம் இதற்கு யார் காரணம் என்று கேட்டதும், தனது தாய்மாமாவின் பெயரை கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை தாயும் தந்தையுமாக இருந்து கட்டணம் செலுத்தி பராமரித்து வந்த தாய்மாமாவை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி உள்ளனர்.
விசாரணையில் , அந்த பெண்ணை தனது மகள் போல வளர்ப்பதாக கூறி தாய்மாமா கதறி அழுதுள்ளார். மேலும் இந்தப் பெண்ணை அவர்கள் வீட்டுக்கு அழைத்து வந்த நாட்களையும், கர்ப்பிணியான மாதத்தையும் கூட்டிக்கழித்து பார்த்த பெண் காவல் அதிகாரிகள் இதன் பின்னணியில் ஏதோ சதி இருப்பதை அறிந்து விசாரணை கோணத்தை மாற்றியுள்ளனர் .
காப்பகத்திற்கு சென்று நிர்வாகிகள் குழுவை சேர்ந்த 10 பேரிடம் விசாரணையை முன்னெடுத்தனர். அங்கு வேலை பார்த்தவர்களின் விவரத்தை சரிபார்த்த போது பல வருடங்களாக அங்கு வேலைபார்த்து வந்த 67 வயதான ஊழியர் ஜீவ நேசன் என்பவர் அண்மையில் பணியில் இருந்து நிறுத்தப்பட்டிருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். விசாரணையில் இரு வாரங்களுக்கு முன்பாக அவர் கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜீவ நேசனை அழைத்து விசாரித்த போது மன வளர்ச்சி குன்றிய பெண்ணின் கர்ப்பத்துக்கு காரணமான கருப்பு ஆடு சிக்கியது..!
அந்த காப்பகத்தில் உள்ள ஊழியர்களில் ஜீவ நேசன், அந்த பெண்ணை கவனித்துக் கொள்வதாக கூறி அந்த காப்பகத்தின் தோட்டத்து பகுதிக்கு அழைத்து சென்று அங்குள்ள ஆளரவமற்ற சூழலை பயன்படுத்தி சுமார் 7 முறை மன வளர்ச்சி குன்றிய அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான் அந்த கொடூரன்.
அந்தப்பெண் கர்ப்பமான தகவல் காப்பக நிர்வாகியான ராஜசேகர் உள்ளிட 10 பேருக்கும் தெரியவந்ததும். காப்பாகத்தின் பெயர் கெட்டு விடும் என்பதால் முதலில் ஜீவ நேசனை அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டு, கர்ப்பிணி பெண்ணை அழைத்து வயிற்றை தடவி இது எப்படி வந்தது ? என்று யார் கேட்டாலும் கேட்டால் தாய்மாமாவின் பெயரை சொல்ல வேண்டும் என்று ஒருவாரமாக அங்குள்ள 4 ஊழியர்கள் அடித்து பயிற்சி அளித்த கொடுமை அரங்கேறி இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.
67 வயது காமுகன் ஜீவநேசனை கைது செய்த காவல்துறையினர், இந்த சம்பவத்தை மறைத்ததோடு, கர்ப்பிணியை அடித்து உதைத்து பொய்சொல்ல வைத்த புகாருக்குள்ளாகி இருக்கும் கிறிஸ்தவ சேவா சங்க காப்பக நிர்வாகிகள் 10 பேரிடமும் மற்றும் 4 ஊழியர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ஆதரவற்றோருக்கும், மனவளர்ச்சி குன்றியோருக்கும் பக்கபலமாக இருந்து பாதுகாத்து வரும் ஏராளமான கிறிஸ்தவ காப்பகங்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் காப்பகம் என்ற சொல்லுக்கு களங்கமாக மாறி இருக்கும் முத்துப்பட்டி கென்னட் அறக்கட்டளை போன்ற கருப்பு ஆடுகள் களையெடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
Comments