அமைச்சரிடம் கோப்புகளை பறித்து கிழித்தெறிந்த திரிணாமூல் உறுப்பினர்.. மாநிலங்களவையில் பரபரப்பு..!
நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் இருந்த கோப்புகளை திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் பறித்துக் கிழித்தெறிந்ததால் அமளி ஏற்பட்டதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் செல்பேசிவழியாக அரசியல் தலைவர்கள், செய்தியாளர்கள் உளவு பார்க்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று எதிரொலித்தது. அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. மாநிலங்களவை மீண்டும் தொடங்கியதும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உளவு மென்பொருள் விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக எழுந்தார். அப்போது அவரிடமிருந்த கோப்புகளை பறித்துத் திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் சாந்தனு சென் கிழித்தெறிந்தார்.
இதையடுத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும், கோப்புகளை கிழித்து எம்பி சாந்தனு சென்னும் கடுஞ்சொற்களால் ஒருவரையொருவர் வசைபாடினர். பாஜக - திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒருவரையொருவர் கடுஞ் சொற்களால் பேசிக் கொண்டதால் அமளி ஏற்பட்டது.
உறுப்பினர்களைப் பலமுறை எச்சரித்தும் அமளி அடங்காததால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னும் பாஜக - திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவான நிலையில் அவைக் காவலர்கள் தலையிட்டு அமைதிப்படுத்தினர்.
Comments