வறுமையில் உழலும் மறைமலை அடிகளார் மகன் - அரசு உதவி செய்ய கோரிக்கை
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் தமிழறிஞர் மறைமலை அடிகளாரின் மகன் முதுமையில், வருவாய் இன்றி, வாடகை நிலுவைத்தொகை கூட கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.. அது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை காணலாம்...
மறைமலையடிகள் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் இப்போதும் மட்டுமின்றி எப்போதும் வணங்குதற்குரியன. அந்த காலத்திலேயே தமிழ் மொழியில் கலந்திருந்த வடமொழி வார்த்தைகள் ஆதிக்கத்திற்கு எதிராக தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கியவர் மறைமலை அடிகள்.
தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நல்ல புலமை கொண்டவராக இருந்தாலுமே, தமிழின் இனிமையால் கவரப்பட்டு வேதாசலம் என்ற தனது இயற்பெயரை மறைமலை அடிகள் என மாற்றிக்கொண்டவர். தமிழுக்காக அருந்தொண்டாற்றிய மறைமலை அடிகளார் நூல்கள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்பட்டு அவருக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்கப்பட்டது.
இவ்வளவு போற்றுதலுக்குரிய மறைமலை அடிகளாரின் மகன் மறை பச்சையப்பன், தனது முதுமை காலத்தில் வருவாய் இன்றி, வாடகை நிலுவைத்தொகை கட்டமுடியாமல் உழன்று வருகிறார். 74 வயதான மறை.பச்சையப்பனின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு 2013-ஆம் ஆண்டு குறைந்த வாடகைத் திட்டத்தில் ராயப்பேட்டை லாயிட்ஸ் காலணியில் வீடு ஒதுக்கப்பட்டது.
ஆனாலும், வேலைக்கு சென்ற இடத்தில் தவறி விழுந்த பச்சையப்பனால் கடந்த 7 வருடங்களாக வேலைக்கு செல்ல முடியாமல் போனது. வயது மூப்பு காரணமாக மறை பச்சையப்பனின் மனைவி காந்திமதி செய்து வந்த ஆசிரியர் பணியும் இல்லாததால் வருவாய் இன்றி வீடு முடங்கியது. இதனால், 5 மாத கால வீட்டு வாடகையை தரமுடியாமல், 28 ஆயிரம் ரூபாய் நிலுவை வைத்திருக்கிறார் மறை. பச்சையப்பன்
நியாயவிலை கடைகளில் கிடைக்கும் அரிசியை கொண்டும், அவர்களின் மகன் தனக்கு வரும் குறைந்த தொகுப்பூதியத்தில் தரும் பணத்தை நம்பியுமே காலம் கடத்துகின்றனர் மறை. பச்சையப்பன் - காந்திமதி தம்பதி.
முன்னதாக, 2019-ஆம் ஆண்டு பச்சையப்பன் மகனிற்கு உலக தமிழ் ஆராய்ச்சி மையத்தில் உள்ள நூலகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டது. இந்த நிலையில், மகனிற்கு கொடுத்துள்ள வேலையை பணி நிரந்தரம் செய்யவேண்டும். அரசு குடியிருப்பிற்கு வாடகையும், நிலுவை வைத்துள்ள 28 ஆயிரம் ரூபாய் வாடகையும் அரசு தள்ளுபடி செய்யவேண்டும் என மறைமலை அடிகளாரின் மகன் மறை. பச்சையப்பன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மறைமலை அடிகளார் மகன் ஏழ்மையில் இருப்பது தொடர்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், அது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் எனவும் கூறினார்.
Comments