ஆசையைத் தூண்டிய மோசடிக் கும்பல் பொறியில் சிக்கிய பொறியியல் மாணவர்
சலுகை விலையில் விலையுயர்ந்த கேமரா என சமூக வலைதளத்தில் விளம்பரப்படுத்தி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரிடம் 21 லட்ச ரூபாயை அபகரித்த மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த 22 வயது இளைஞர், கீழக்கரையிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். புகைப்படக் கலை மீதான ஆர்வத்தால், வகை வகையான கேமராக்கள் குறித்து இணையதளங்களில் தேடுவதை அவர் வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
கூகுள் கணக்குகள் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதலங்களுடன் இணைப்பில் உள்ளதால், கூகுளில் எதையாவது தேடும்போது, அது சமூக வலைதலங்களிலும் எதிரொலிக்கும்.
அந்த வகையில், மாணவரின் கேமரா விவரங்களை கூகுளில் தேடிய பின், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கேமராக்கள் விற்பனை தொடர்பான விளம்பரங்கள் வரிசைகட்டத் துவங்கியுள்ளன. அப்படி வந்த விளம்பரம் ஒன்றில் 30 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான நவீன கேமரா 10 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் என வலை விரித்திருக்கின்றனர்.
அந்த விளம்பரத்தை கிளிக் செய்து உள்ளே சென்ற மாணவரின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், தாங்கள் குறிப்பிடும் வங்கிக் கணக்கு எண்ணுக்கு 10 ஆயிரம் ரூபாயை அனுப்புமாறு கூறியிருக்கின்றனர். மறுநாள் மீண்டும் போனில் அழைத்தவர்கள், மேலும் 60 ஆயிரம் ரூபாயை செலுத்தினால், கேமராவுடன் விலையுயர்ந்த ஆப்பிள் ஐ போன், இரண்டு விலையுயர்ந்த ஆண்ட்ராய்டு போன்கள், இன்னும் சில எல்க்ட்ரானிக் பொருட்கள் அனுப்பி வைப்பதாகக் கூறியுள்ளனர்.
அவரை நம்பவைக்க அந்தப் பொருட்களின் கவர்ச்சிகரமான புகைப்படங்களையும் அனுப்பி உள்ளனர். அவர்கள் அனுப்பிய புகைப்படங்களில் இருந்த மொத்த பொருட்களின் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாயைத் தொடும் என்று கூறப்படுகிறது. இவ்வளவு விலை கொண்ட பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கிறதே என எண்ணி, அவர்கள் கேட்ட தொகையை கூகுள் பே மூலம் அனுப்பியுள்ளார் அந்த மாணவர்.
நாட்கள் சென்ற பிறகும் பொருட்கள் வந்து சேராத நிலையில், தனக்கு வந்த செல்போன் எண்ணுக்கு மீண்டும் அழைத்தபோது, உங்களுக்கு வழங்கப்படவுள்ள பொருட்கள் வெளிநாட்டில் இருந்து வருவதால் அதற்கு வரியாக 90 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என அடுத்த வலையை வீசியுள்ளனர். சளைக்காமல் அந்த மாணவரும் கேட்ட தொகையை மீண்டும் அனுப்பி உள்ளார்.
போக்குவரத்து செலவு, விமான நிலைய கட்டணம் என பல வகைகளில் நம்ப வைக்கும்படி பேசிய அந்த கும்பல் 21 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் வரை பறித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்த நிலையில், பொருட்கள் வந்து சேராததால், தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கிறார் அந்த மாணவர்.
வெளிநாட்டில் வேலை செய்துவரும் தந்தை, சொந்த ஊரில் வீடு கட்டுவதற்காக அவ்வப்போது அனுப்பிய பணத்தைத் தான் மோசடி கும்பலிடம் பறிகொடுத்து இருக்கிறார் மாணவர். பெரும் ஏமாற்றத்தால் 2 நாட்களாக அறையிலேயே முடங்கிக் கிடந்த அந்த மாணவரை, உறவினர்கள் அழைத்துச் சென்று காவல்துறையில் புகாரளிக்க வைத்துள்ளனர். மோசடி கும்பலின் வங்கிக் கணக்கு எண்கள் அனைத்தும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எண்களாக இருப்பதால், தனிப்படை போலீசார் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விலையில் பெரும் வித்தியாசத்தைக் கொண்டு வரும் கவர்ச்சிகரமான இணைய வழி விளம்பரங்களை நம்பி முகம் தெரியாத நபர்களின் வங்கிக் கணக்குக்கு பணம் போடுவதைத் தவிர்க்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்துகின்றனர்.
Comments