முக்கிய பிரமுகர்களின் செல்போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் நாடாளுமன்றக் குழு 28ந் தேதி விசாரணை

0 2244

செல்போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டதையடுத்து வரும் 28ம் தேதி நாடாளுமன்ற குழு விசாரணை நடத்த உள்ளது. இந்த விசாரணையில் மத்திய அரசு அதிகாரிகள் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், செய்தியாளர்கள் , தொழிலதிபர்கள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன் உரையாடல்களை இஸ்ரேலின் பெகாஸஸ் செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இக்குற்றச்சாட்டை இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் மறுத்துள்ளது.

இப்பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இரண்டு நாட்களுக்கு முடங்கியது.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இப்போது இந்த விவகாரத்தை நாடாளுமன்ற நிலைக்குழு எடுத்துக் கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தலைமையிலான 31 பேர் கொண்ட நிலைக்குழு பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்த உள்ளது.

இக்குழுவின் கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த விசாரணையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை, தொலைத் தொடர்புத்துறை. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ஆகிய அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments