ஏடிஎம்-ல் உதவி கேட்ட பெண்ணை ஏமாற்றி ரூ.1.99லட்சம் பணத்தை திருடிய வடமாநில இளைஞன்
சென்னையில் ஏடிஎம் கார்டுகளை மாற்றி உதவி கேட்ட பெண்ணிடம் இருந்து ஒரு லட்சத்து 99ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற வடமாநில இளைஞன் பிடிபட்டான்.
கடந்த 14-ந் தேதி ராஜாஜி சாலையிலுள்ள எஸ்.பி.ஐ ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுக்க சென்ற சுகந்தி என்ற பெண், பணம் வராததால், அங்கு நின்றிருந்த இளைஞரின் உதவியை நாடியுள்ளார். சுகந்திக்கு உதவுவது போல நடித்தவன், இருப்பு தொகையை மட்டும் சோதித்துப் பார்த்துவிட்டு, பணம் வரவில்லை என்று அந்த ஏ.டி.எம். கார்டுக்கு பதிலாக தன்னிடம் இருந்த வேறு ஏ.டி.எம். கார்டை சுகந்தியிடம் மாற்றிக் கொடுத்துள்ளான்.
வேலைக்குச் செல்லும் அவசரத்தில் சுகந்தியும் அதை கவனிக்காத நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. புகாரின் பேரில் சிசிடிவியை கைப்பற்றிய போலீசார், அத்திப்பட்டு பகுதியில் வைத்து அவனை கைது செய்தனர். பீகாரைச் சேர்ந்த அவனிடம் இருந்து 24 ஆயிரம் ரூபாய் பணம், 10 ஏ.டி.எம் கார்டுகள், 1 செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
Comments