தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாட்டம்
பக்ரீத் பெருநாளையொட்டி நாடு முழுவதும் இஸ்லாமியப் பெருமக்கள் புத்தாடை அணிந்து மசூதிகளிலும் வீடுகளிலும் தொழுகை நடத்தியும், ஏழை எளியோருக்கு உணவு வழங்கியும் கொண்டாடினர்.
டெல்லி ஜாமா மசூதியில் குறைந்த எண்ணிக்கையிலானோர் மட்டுமே தொழுகைக்கு அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தடுப்பு விதிகளைக் கருத்திற்கொண்டு கூட்டமாகத் தொழுகை நடத்த அனுமதிக்கப்படவில்லை என மசூதியின் இமாம் தெரிவித்தார்.
மும்பை மாகிம் தர்க்காவிலும் கூட்டமாகத் தொழுகை நடத்த அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொருவரின் பாதுகாப்புக் கருதி விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது முதன்மையானது என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள கைருத்தீன் மசூதியில் ஒரேநேரத்தில் நூற்றுக்கணக்கானோர் தொழுகையில் ஈடுபட்டனர்.
கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் பாளையம் ஜுமா மசூதியில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஜாமா மசூதியில் ஒரு நேரத்தில் குறிப்பிட்ட அளவிலான ஆட்களே தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடித்து மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி டெல்லியில் உள்ள அவரது வீட்டிலேயே தொழுகை நடத்தினார். ஜம்முவில் தாவி ஆற்றின் பாலம் அருகே உள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகம் முழுவதுமுள்ள மசூதிகளில் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இறைவனின் நேசத்துக்கு உரியவராகவும், தூதராகவும் போற்றப்பட்ட இப்ராகீமின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு வீடுகளிலேயே பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. ராயப்பேட்டை புதிய கல்லூரி வளாகத்திலுள்ள பள்ளி வாசலில் நடைபெற்ற தொழுகையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து பங்கேற்றனர். தொழுகை முடிந்த பின்னர் சிறுவர்கள் உட்பட ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் நடைபெற்ற கூட்டுத் தொழுகையில் பெண்கள் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து வந்து கலந்து கொண்டதோடு, ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.
உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. பக்ரீத் பண்டிகையொட்டி நாமக்கல் மாவட்டம் பேட்டையிலுள்ள பள்ளி வாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் 1000-த்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலுள்ள மசூதியில் நடந்த தொழுகையில் உலக மக்கள் அனைவரும் கொரோனாவில் இருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என தொழுகை நடைபெற்றது.
Comments