மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்
தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் நேற்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்த நிலையில், மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்து உள்ளார்.
இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக செய்தி வெளியானது.
இந்த நிலையில் நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார்.
மக்களவையில் பேசிய அவர், ஒருவருடைய செல்போனை உளவு பார்க்கவேண்டும் என்றால் மத்திய- மாநில அரசுகளின் விதிமுறைகள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
அந்த விதிகளை மீறி மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் யாரையும் உளவு பார்க்கவில்லை எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். உளவு பார்த்ததாகக் கூறப்படும் தகவல், இந்திய ஜனநாயகத்தைக் களங்கப்படுத்தும் முயற்சி என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களிலும் வாட்ஸ் அப்பில் பெகாசஸ் செயலி பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து உச்ச நீதிமன்றத்திலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
Comments