இந்த படை போதுமா... இன்னும் அடி வேணுமா? இலங்கையை சுளுக்கெடுத்த இந்திய கிரிக்கெட் அணி
இரண்டாம் தர அணியை அனுப்பியிருப்பதாக விமர்சித்த அர்ஜூனா ரணதுங்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்கள் இலங்கை அணியை அடித்து துவைத்து எடுத்து விட்டனர்.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று ஃபார்மெட்டுகளுக்கும் கேப்டன் விராட் கோலிதான். தற்போது, இங்கிலாந்தில் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக முகாமிட்டுள்ளது.
அதே நேரத்தில் ஏற்கெனவே இலங்கை கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்தப்படி அந்த நாட்டு அணியுடன் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இந்தியா தீர்மானித்தது. ஷிகர் தவானை கேப்டனாகவும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரன ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமித்து, இலங்கைக்கு இந்திய அணி அனுப்பி வைக்கப்பட்டது.
23 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக இந்திய அணி ஒருநாள் போட்டிக்கு ஒரு அணியையும் டெஸ்ட் போட்டிக்கு மற்றோரு அணியையும் சர்வதேச போட்டியில் பங்கேற்க வைப்பது இதுதான் முதன்முறை. முன்னதாக 1998 ஆம் ஆண்டு அஜய் ஜடேஜா தலைமையில் மலேசியாவில் நடந்த காமன்வெல்த் போட்டிக்கு ஒரு அணியையும் கனடாவில் டொரோன்டா நகரில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்க முகமது அசாருதீன் தலைமையிலான மற்றோரு அணியும் அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில் , இலங்கைக்கு வந்த அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாததால், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா கோபமடைந்தார். இலங்கைக்கு வந்திருப்பது இந்தியாவின் இரண்டாம் தர அணி என அர்ஜூனா ரணதுங்கா விமர்சித்தார். அதற்கு, இந்திய ரசிகர்கள் முதலில் , இந்த அணியை உங்களால் வெல்ல முடியுமா... வென்று காட்டி விட்டு பேசுங்கள் என்று சமூகவலைத்தளத்தில் பதிலடி கொடுத்தனர்.
இந்த நிலையில், ரணதுங்காவின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய அணியின் இளம் வீரர்கள் முதல் ஒருநாள் போட்டியிலேயே அதிரடியாக விளையாடி இலங்கையை தோற்கடித்தனர். கொழும்பில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 262 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் அதிரடியாக ஆட 36.4 ஓவர்களிலேயே 263 ரன்களை அடித்து அபாராமாக வென்றது.
கேப்டன் ஷிகர் தவான் 86 ரன்களையும் பிரித்வி ஷா, 24 பந்துகளில் 43 ரன்களையும் அறிமுக வீரரான இஷான் கிஷான் 59 ரன்களையும் அதிரடியாக குவித்தனர்.இந்திய அணியின் வெற்றியை அடுத்து, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் இந்திய வீரர் பிரித்வி ஷாவை மனம் திறந்து பாராட்டியுள்ளார். முரளிதரன் கூறுகையில், பிரித்வி ஷா அச்சமற்ற கிரிக்கெட்டை ஆடக் கூடியவர் என்றும் அவரை நீண்ட நேரம் களத்தில் வைத்திருந்தால், எதிரணிக்கு டேஞ்சர்தான் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இஷான் கிஷனும் பிரித்வி ஷா போலவே ஆடினார் என்றும் 10 ஒவர்களில் 90 ரன்கள் என்பது அசாத்தியமான தொடக்கம் என்றும் இலங்கை பந்துவீச்சாளர்களிடத்தில் விக்கெட்டுகள் வீழ்த்தும் நோக்கமே இல்லை என்றும் முரளிதரன் குற்றம் சாட்டினார்.மேலும், இலங்கை அணியின் பந்து வீச்சு சாதாரணமாக சராசரிக்கும் கீழ் இருந்தது என்றும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் உலகத்தரமான பவுலர்களையே பிரித்வி ஷா, இஷான் கிஸான் போன்றவர்கள் அடித்து விளாசியிருக்கிறார்கள் என்றும் அதனால், இலங்கை பந்துவீச்சாளர்களை, இந்திய பேட்ஸ்மேன்கள் சீரியசாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்றும் முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார்.
Comments