தடம் மாறிய மகள் - தற்கொலை செய்து கொண்ட தாய் - துக்க வீடாக மாறிய திருமண வீடு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பெற்றோர் நிச்சயித்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இளம்பெண் காதலனுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், இதனை அவமானமாக கருதி இளம்பெண்ணின் தாய், தம்பி ஆகியோர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.
ஊத்தங்கரையை அடுத்த மிண்டிகிரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மகாலிங்கம் - அம்சவேணி தம்பதி. மகாலிங்கம் பெங்களூருவில் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் நிலையில், இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் கிராமத்தில் வசித்து வந்துள்ளார் அம்சவேணி. இந்த நிலையில் 19 வயதான மூத்த மகள் பிரியாவும் பக்கத்து வீட்டு இளைஞனான திருப்பதி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனையடுத்து மகளுக்கு திருமணம் செய்தால்தான் பாதுகாப்பு என்ற வழக்கமான முடிவை பெற்றோர் எடுக்க, காதலனுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவை மகள் எடுத்துள்ளார். பிரியாவுக்கு வரன் பார்த்து, நிச்சயம் செய்து, பத்திரிக்கையும் அடித்து, ஊர் முழுவதும் விநியோகமும் செய்துள்ளனர் பெற்றோர்.
அடுத்த மாதம் 20ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், திருப்பதியும் பிரியாவும் திட்டமிட்டபடி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இருவரும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். திருமணப் பத்திரிக்கை அடித்து ஊருக்கும் உறவினருக்கும் கொடுத்த பின் மகள் காதலனுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்றதை அம்சவேணி பெருத்த அவமானமாக கருதியுள்ளார்.
பெங்களூருவில் இருக்கும் கணவருக்கு மகளின் காதல் விஷயம் தற்கொலை வரை சென்றது தெரிந்தால் பிரச்சனை மேலும் பெரிதாகும் என்று எண்ணிய அவர், மற்ற இரு பிள்ளைகளோடு தற்கொலை செய்துகொள்வது என்ற விபரீத முடிவை எடுத்துள்ளார்.அதன்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 13 வயது மகன் விஷ்ணு மற்றும் 15 வயதான இளைய மகள் திரிஷா ஆகியோரோடு வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்துள்ளார் அம்சவேணி.
இதில் அம்சவேணி தண்ணீரில் மூழ்கி உயிரிழக்க, சிறுவன் விஷ்ணு சுற்றுப்பாறையில் தலைமோதி உயிரிழக்க, சிறுமி திரிஷா மட்டும் கிணற்றின் குறுக்கே சென்ற கம்பி ஒன்றில் சிக்கி இரவு முழுவதும் போராடியுள்ளார். அதிகாலை அவ்வழியாகச் சென்றவர்கள் த்ரிஷாவின் கூக்குரலைக் கேட்டு தீயணைப்புத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சிறுமி திரிஷாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மகளின் திருமண ஏற்பாடுகள் தொடர்பாக பெங்களூருவில் இருந்த மகாலிங்கம், நடந்த சம்பவங்கள் குறித்து கேள்வியுற்று நொறுங்கிப் போயிருக்கிறார்.உரிய பக்குவமற்ற வயதில் வருவது காதல் அல்ல, எதிர்பாலின ஈர்ப்பு என்பதை இளம் பிள்ளைகள் புரிந்துகொள்ளும் வகையில் பெற்றோர் எடுத்துரைக்க வேண்டியது அவசியம்.
அதேசமயம் சமூகம் தங்களை இனி எப்படிப் பார்க்கும் என்ற எண்ணத்தில் குழந்தைகளைக் கொன்றுவிட்டு பெற்றவர்கள் தற்கொலை செய்துகொள்வதும் தீர்வாகாது. காலம் எல்லாவிதமான காயங்களையும் அவமானங்களையும் சரி செய்யும் என்ற உண்மையை புரிந்துகொண்டு வாழ்ந்து காட்டுவதே அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் வழிகாட்டுதலாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Comments