டெல்லியில் கனமழை வாகனப் போக்குவரத்து பாதிப்பு
டெல்லியிலும் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்றிரவு முதல் விடிய விடியக் கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியிலும், அதையொட்டிய உத்தரப்பிரதேசம், அரியானா மாநிலப் பகுதிகளிலும் நேற்றிரவு முதல் விடிய விடியக் கனமழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. நீர் தேங்கிய பகுதிகளில் வாகனங்கள் மிதமான வேகத்திலேயே இயக்கப்பட்டு வருகின்றன.
இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி மெதுவாகச் செல்கின்றன. டெல்லி பிரகதி மைதான், ஐடிஓ ஆகிய பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன.
அரியானாவில் உள்ள குருகிராமிலும் நேற்றிரவு முதல் விடியவிடியக் கனமழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. நெடுஞ்சாலைகளிலும் நீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் நீரில் தத்தளித்தபடி மெதுவாகச் சென்றன. தெற்கு வெளிவட்டச் சாலையிலும் மழைநீர் தேங்கிய பகுதிகளில் வாகனங்கள் மெதுவாகச் சென்றன.
குருகிராமின் பத்தாவது செக்டாரில் பெரும்பாலான பகுதிகளில் முழங்காலளவு தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் நீரில் மூழ்கின. இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
Comments