பழமைக்கு பாலமான புதுமைப் பூங்கா: வடசென்னையில் ஒரு வசீகரம்
வடசென்னையில் பராமரிப்பின்றி புதர் மண்டிய, 100 ஆண்டுகள் பழமையான தொழிற்சாலை பாரம்பரிய பூங்காவாக மாறியுள்ளது. பழமையான இராட்சத கடைசல் எந்திரங்களை பாதுகாத்து, பசுமையான பூங்காவாக மாற்றி திகைக்க வைத்த தோட்டக்கலை துறை குறித்த செய்தித் தொகுப்பு...
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரில், பிரிட்டிஷார் ஆட்சியின்போது 1919 ஆண்டு இராட்சத கடைசல் இயந்திரங்களை கப்பல்கள் மூலம் கொண்டு வந்து விவசாய பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் தயாரிக்கப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு, இந்த தொழில் பேட்டை, தொழில்துறை, அதன்பின் வேளாண் பொறியில் துறை கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்து பராமரிக்கப்பட்டது. 2002ஆம் ஆண்டு வரை விவசாய பணிகளுக்கு தேவையான கருவிகளை தயாரித்து வந்த இந்த தொழிற்பேட்டையானது அதன்பின் பராமரிப்பு இன்றி புதர் மண்டிய காடாக மாறியது. பின்னர், 3.8 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த இடத்தை தோட்டகலை துறையிடம் தமிழக அரசு ஒப்படைத்து, 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தோட்டக்கலை பாரம்பரிய பூங்கா அமைக்கப்பட்டது.
பூங்காவில் 7 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புல்தரை அமைக்கப்பட்டுள்ளது.மேலும் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட அழகு செடிகள் வைக்கப்பட்டு, ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பழமையான கிணறு பாதுகாக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் கவரும் வகையில் விளையாட்டு உபகரணங்கள், கண்ணைக் கவரும் வகையில் வண்ண வண்ண சுவர் ஓவியங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டு உட்புற தோட்டங்களில் அழகு தாவரங்களுடன், பழையான இராட்சத கடைசல் இயந்திரங்கள் உள்ளிட்ட 32 வகையான இயந்திரங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
பூங்காவில் 2000 சதுர அடி பரப்பளவில், மண் இல்லா தாவர வளர்ப்பு முறையில், கீரை வகைகள், இனிப்பு துளசி வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் குளிர்சாதன வசதி கொண்ட, 126 இருக்கையுடன் உள் அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.
தோட்டகலை பாரம்பரிய பூங்காவை பார்க்க நுழைவுக் கட்டணமாக சிறுவர்களுக்கு 10 ரூபாயும், பெரியவர்களுக்கு 20 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. பூங்காவில் நடை பயிற்சி செய்ய மாதம் 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எப்போதும் பிசியான நகரவாழ்வில் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் இந்த பாரம்பரிய பூங்கா அமைந்துள்ளது.
Comments