பிளஸ் டூ ரிசல்ட் வெளியீடு.. 100 சதவீதம் தேர்ச்சி..!
12ஆம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண்களை இணைய தளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். பிளஸ் 2 மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவ, மாணவிகளுக்கு தேர்வு பின்னர் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலால் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெறவில்லை. 10ஆம் வகுப்பு மதிப்பெண் 50 சதவீதமும் 11ம் வகுப்பு மதிப்பெண் 20 சதவீதமும், 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் இருந்து 30 சதவீதமும் கணக்கிடப்பட்டு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான ரிசல்ட் மற்றும் மதிப்பெண் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன்படி, 12ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் 4,35,973 பேர், மாணவர்கள் 3,80,500 பேர் என மொத்த பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 8,16,473 பேர். இவர்கள் அனைவரும் பிளஸ் 2-வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் பதிவுசெய்துள்ள கைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.http://www.tnresults.nic.in/, http://www.dge.tn.gov.in/,https://www.dge2.tn.nic.in/ ஆகிய இணைய தளங்களில் பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.இந்த ஆண்டு முதல் முறையாக தசம எண் அடிப்படையில் பிளஸ் 2 மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பிளஸ் 2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் எந்த மாணாக்கரும் எடுக்கவில்லை. மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு நடைபெற்று வருகிறது என தெரிவித்த அமைச்சர், தனித் தேர்வர்களுக்கும் பிளஸ் 2 தேர்வு நடத்த ஏற்பாடு செய்து வருவதாகக் கூறினார். கொரோனா சூழலை பொறுத்து செப்டம்பர் அல்லது அக்டோபரில் பிளஸ் 2 தேர்வு நடைபெறலாம் எனவும் அவர் பதிலளித்தார்.
Comments