தடுப்பூசி போட்ட வலிமையான தோள்கள்.. நாடு முழுவதும் 40 கோடி பாகுபலிகள்..!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பாகுபலியாக மாறிவிடுகிறார்கள் என்றும், இந்தியாவில் 40 கோடி பேர் பாகுபலியாக மாறியுள்ளனர் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க நாடாளுமன்றம் வந்த பிரதமர் மோடி, வானம் தூறிக் கொண்டிருந்ததால் குடைபிடித்தபடியே செய்தியாளர்களை சந்தித்தார்.
பாகு என்ற இந்திச் சொல்லுக்கு தோள்கள் என அர்த்தம் உள்ளதால், தடுப்பூசி செலுத்துத்திக் கொண்டவர்கள் பாகுபலியாக, அதாவது வலிமையான தோள்களைக் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள் என பிரதமர் குறிப்பிட்டார். கொரோனாவுக்கு எதிரான போரில் 40 கோடி பேர் பாகுபலிகளாக மாறியிருப்பதாகவும் அவர் கூறினார்.
உலகமே பெருந்தொற்றின் பிடியில் உள்ள நிலையில், அது குறித்து முன்னுரிமை அடிப்படையில், அர்த்தமுள்ள விவாதம் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டும் என்றார். அவையில் அனைத்து எம்.பி.க்களும் மிகவும் கடினமான, கூர்மையான கேள்விகளை எழுப்ப வேண்டும் என்றும், அதேசமயம் முறையான சூழலில் அரசு பதிலளிக்கவும் அனுமதிக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இத்தகைய போக்கு, ஜனநாயகத்தையும் மக்களின் நம்பிக்கையையும் வலுப்படுத்தி, வளர்ச்சி வேகத்தையும் அதிகரிக்கச் செய்யும் என்றார். நாளை மாலை, அனைத்து நாடாளுமன்ற கட்சித் தலைவர்களை சந்தித்து, பெருந்தொற்று குறித்து விரிவான விவரங்களை தர இருப்பதாகவும், நாடாளுமன்றத்திற்குள்ளேயும், வெளியேயும் விவாதங்கள் தொடர வேண்டும் என்பதே அரசின் விருப்பம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
Comments