மத்திய அமைச்சர்கள் உள்பட 300 இந்தியர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகார்- மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு

0 4592

மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளியான தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் வாட்ஸ் ஆப்பின் தகவல்கள் இஸ்ரேலின் பெகாஸஸ் (Pegasus )என்ற உளவு செயலி மூலமாக அபகரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தொலைபேசி உரையாடல்கள் உளவு பார்க்கப்பட்டதாக பாரிஸை சேர்ந்த forbidden media, amnesty international ஆகிய அமைப்புகள் குற்றம் சாட்டின. பல்வேறு ஊடகங்கள் இதுதொடர்பாக சர்வதேச அளவில் கூட்டாக விசாரணை மேற்கொண்டன.

இந்தியாவில் 2 மத்திய அமைச்சர்கள், 3 எதிர்க்கட்சித் தலைவர்கள், உயர் பதவியில் இருப்பவர்கள், அரசு அதிகாரிகள், விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட பலரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை அறிக்கை அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய அரசு நிராகரித்துள்ளது.இந்தியா உறுதியான ஜனநாயக நாடு என்றும் அனைத்து குடிமக்களின் தனிநபர் உரிமைகள் பாதுகாக்கப்படுவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் மத்திய அரசு மறுப்பு வெளியிட்டுள்ளது.

இதே போன்று பெகாஸஸ் செயலியை இந்தியாவுக்கு விற்பனை செய்த நிறுவனமும் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதற்கான புகார்களை மறுத்துள்ளது. தவறான புகார்களைத் தெரிவிப்போர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக பெகாஸிஸ் செயலியை சந்தைப்படுத்தும் இஸ்ரேலின் NSO நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments