தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

0 5933
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

கோயம்புத்தூர், நீலகிரி, சேலம் உள்ளிட்ட உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும், பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உட்பட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழைப்பதிவானது.

இந்நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்வதாக கூறியுள்ளது.

கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 11 மாவட்டங்களில், அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 11 மாவட்டங்களில் வருகிற புதன்கிழமைக்குப் பிறகு, மழையின் தாக்கம் குறையக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னலுடன், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களின் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளிலும், இடி மின்னலுடன், மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது

சென்னையைப் பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், இடிமின்னலுடன், மழை பெய்யக்கூடும் என்றும், கூறப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல், தமிழ்நாட்டின் சில கடலோர பகுதிகளிலும், அரபிக்கடல் பகுதிகளிலும், மணிக்கு 60 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, வடமேற்கு வங்ககடல் பகுதியில் வரும் 21ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments