கொடூரமாகக் கொல்லப்பட்ட தம்பதி ; கழிவுநீர் தொட்டியில் வீசப்பட்ட சடலங்கள்
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே ஓய்வு பெற்ற குடிநீர் வாரிய ஊழியரும் அவரது மனைவியும் கொடூரமாகக் கொல்லப்பட்டு கழிவுநீர் தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
வண்டலூர் கொளப்பாக்கத்தில் ஓய்வு பெற்ற குடிநீர் வாரிய ஊழியர் சாம்சன் தினகரனும் அவரது 2வது மனைவி ஜெனட்டும் தனியே வசித்து வந்துள்ளனர். சாம்சன் தினகரனின் முதல் மனைவி ஆலிஸ், மகன் இம்மானுவேல், மகள் பெனிட்டா ஆகியோர் கூடுவாஞ்சேரியில் தனியாக வசிக்கின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு மகள் பெனிட்டா தந்தையின் செல்போன் எண்ணுக்கு அழைத்துள்ளார். பலமுறை அழைத்தும் அவர் போனை எடுக்காததால், மறுநாள் காலை மீண்டும் அழைத்துள்ளார். அப்போதும் சாம்சன் போனை எடுக்காததால், பக்கத்து வீட்டுக்காரருக்கு போன் செய்து வீடு திறந்திருக்கிறதா என பார்க்குமாறு கூறியுள்ளார்.
முன்பக்க கதவு உள் தாழ்ப்பாள் போடப்பட்டும் பின்பக்கக் கதவுகள் திறக்கப்பட்டும் இருப்பதாக பக்கத்து வீட்டுக்காரர் கூறியிருக்கிறார். சந்தேகமடைந்த மகள், தாய் மற்றும் சகோதரனுடன் கொளப்பாக்கம் வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். வீட்டில் சாம்சன் தினகரனும் ஜெனட்டுயும் மாயமானதைக் கண்டு போலீசுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் வந்து பார்த்தபோது பின் பக்கத்தில் உள்ள மற்றொரு வீட்டின் அறை பூட்டப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.
இருவரது செல்போன்களுக்கும் தொடர்பு கொண்டபோது, ஜெனட்டின் செல்போன் முன்பக்க வீட்டிலும், சாம்சங்தினகரனின் செல்போன் அப்பகுதியிலுள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலையிலும் கிடந்துள்ளன.இதனையடுத்து மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது, அங்குள்ள அறை ஒன்றில் ரத்தக்கறைகளை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய முயற்சித்து இருப்பதும் துர்நாற்றம் வீசாமல் இருக்க மஞ்சள் தூளை தூவி விட்டிருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து சோதனையை தீவிரப்படுத்திய போலீசார், பின்பக்கம் இருந்த கழிவுநீர் தொட்டியை திறந்து பார்த்துள்ளனர். அதில் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஜெனிட்டாவின் சடலமும், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சாம்சன் தினகரனின் சடலமும் கிடந்துள்ளன. சடலங்களை மீட்ட போலீசார், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.சொத்துக்காக நடைபெற்ற கொலையா அல்லது வெளி நபர்கள் அரங்கேற்றிய கொலையா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
Comments