கொரோனா மூன்றாவது அலைக்கு வித்திடும் 4 காரணங்கள்: ஆகஸ்ட் இறுதியில் தாக்க வாய்ப்பு

0 13214
கொரோனா மூன்றாவது அலைக்கு வித்திடும் 4 காரணங்கள்: ஆகஸ்ட் இறுதியில் தாக்க வாய்ப்பு

இந்தியாவை கொரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட் இறுதியில் தாக்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ள, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், ஆனால் 3வது அலை இரண்டாவது அலையைவிட தீவிரம் குறைந்ததாகவே இருக்கும் என தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு பல்வேறு காரணங்களுக்காக கூட்டம் சேருவது அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி, மூன்றாவது அலை என்பது தவிர்க்க இயலாதது என இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்திருந்தது. அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு, நோய்எதிர்ப்பாற்றலை மீறி பரவக்கூடிய கொரோனா வகை உருவானால், மூன்றாவது அலையின் பாதிப்பு இன்னும் பெரிதாக இருக்கும் என்றும், சில கட்டுப்பாடுகளை நீட்டித்து, அதேசமயம் வைரஸ் உருமாற்றங்கள் மோசமடையவில்லை எனில் பாதிப்பை குறைக்க முடியும் என ஆய்வுகள் காட்டுவதாக எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா கூறியிருந்தார்.

இந்நிலையில், ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் தொற்றுநோயியல் பிரிவு தலைவரான டாக்டர் சமீரன் பண்டா, நாடு தழுவிய அளவில் மூன்றாவது அலை இருக்கக்கூடும் என்றாலும், அதற்காக இரண்டாவது அலை போல தீவிரமானதாகவோ அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவோ இருக்கும் என அர்த்தமில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

மாநிலங்கள் முன்கூட்டியே கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்வது, முதல் இரண்டு அலைகளில் பொதுமக்களிடையே ஏற்பட்ட நோய்எதிர்ப்பு சக்தி குறைவது, நோய் எதிர்ப்புச் சக்தியை மீறி பரவக்கூடிய உருமாற்ற வகை உருவாவது, அல்லது மிகவும் வேகமாகப் பரவக்கூடிய உருமாற்ற வகை உருவாவது ஆகிய 4 காரணங்கள், ஆகஸ்ட் இறுதியில் மூன்றாவது அலைக்கு வித்திடலாம் என அவர் கூறியுள்ளார். டெல்டா பிளஸ் மூன்றாவது அலையை ஏற்படுத்துமா எனக் கேட்டபோது, டெல்டா வகையால் தற்போதுள்ளதைவிட மேலும் பெருமளவிலான பொது சுகாதார பாதிப்பு ஏற்படும் என தாம் எதிர்பார்க்கவில்லை என டாக்டர் சமீரன் பண்டா பதிலளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments