தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? - முதலமைச்சர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் குறித்து முடிவெடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு, வருகிற 19-ந்தேதியுடன் முடிவடைகிறது. தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில், 19ம் தேதிக்கு பிறகு தளர்வுகள் மேலும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர், பொதுத்துறை, வருவாய்த்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க தற்போது தடை உள்ளது. இன்று நடைபெறும் கூட்டத்தில், உயர் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளைத் திறப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Comments