தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி குழுவினர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி பயணம்

0 2537

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என அனைத்துக் கட்சிக் குழுவினர் மத்திய அரசிடம் இன்று நேரில் வலியுறுத்துகின்றனர்.

மேகதாதுவில், புதிய அணைகட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியை பல்வேறு வழிகளில் தமிழக அரசு தடுத்து வருகிறது. தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, கடந்த12-ம் தேதி அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்களின் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தனர்.

இக்கூட்டத்தின் தீர்மானங்களை மத்திய அரசிடம் அனைத்து கட்சியினரும் நேரில் சென்று முதல்கட்டமாக வழங்குவது, அதன்பிறகு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று இக்கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து, அனைத்துகட்சிக் குழுவினர் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோரை சந்தித்து வலியுறுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை செயலர் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றனர். அனைத்துக்கட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் நேற்றும், இன்றும் புறப்பட்டுச் சென்றனர்.

அமைச்சர் துரைமுருகன் தலைமையில், அனைத்துக் கட்சிக் குழுவினர், இன்று மாலை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுக்கின்றனர். பிரதமரை சந்திக்க அனுமதி கிடைத்ததும் அவரையும் சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments