3 பேரை திருமணம் செய்து பண மோசடி.. பச்சைக்கிளியின் பலே பிளான்..! வடிவேலு பட காமெடியில் ஒரு சம்பவம்
ஆந்திராவில், 3 ஆண்களை ஏமாற்றி காதலித்து திருமணம் செய்ததோடு, மூன்றாவது காதல் கணவரிடம் இருந்து பணம், நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிய பெண் போலீசில் சிக்கினார். பணத்துக்காக 3 ஆண்களை காதல் வலையில் வீழ்த்திய பச்சைக்கிளியின் மோசடி பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...
மருதமலை படத்தில், காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த பெண்ணுக்கு இது எத்தனாவது கணவர் என நடிகர் வடிவேலு குழம்பி போன காமெடிக் காட்சிகள் மிகவும் பிரபலமானது....
இதேபோன்றதொரு சம்பவம் தான் ஆந்திர மாநிலம் சித்தூரில் நடந்துள்ளது. திருப்பதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 26 வயதான சுஹாசினிக்கும், அதே நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வந்த சுனிலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாற, தான் ஒரு அனாதை என அறிமுகமாகிக் கொண்ட சுகாசினியை அப்படியே நம்பியை சுனிலும் கடந்த ஆண்டு குடும்பத்தினர் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பு சுனிலிடம், சுகாசினி 2 லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர், திருமணம் முடிந்து சில நாட்கள் கழித்து தன்னை வளர்த்த தாய்மாமா உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவச் செலவுக்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறி சுனிலின் தந்தையிடம் 2லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாகவும் சொல்லப்படுகின்றது.
இந்த பணம் வாங்கிய விவகாரம் சுனிலுக்கு தெரியவரவே இருவருக்கும் இடையே தகராறு மூண்டது. சுனிலின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய சுகாசினி, கடைசியில் வீட்டில் இருந்த பணம், நகைகளை எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டார். இதற்கு பிறகு, சுகாசினியின் ஆதார் கார்டில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்று விசாரித்த போது சுனிலுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
சுஹாசினிக்கு ஏற்கனவே நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுனில், அலிபிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசாரின் விசாரணையில், வினய் என்பவரை திருமணம் செய்து கொண்டு பண மோசடி செய்ததாக சுஹாசினி மீது ஏற்கனவே வழக்கு ஒரு பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சுனில் அளித்த புகாரில் சுகாசினி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை ஒரு மாதமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் திருப்பதி சிவிம்ஸ் மருத்துவமனை அருகே சுற்றித்திரிந்த சுகாசினி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
Comments