மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சந்திப்பு
தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தவுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சரைச் சந்திப்பதற்காக டெல்லிக்கு புறப்பட்ட அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தப் போவதாகக் கூறினார். மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து நடத்தவும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கவும் கேட்டுக் கொள்ளப் போவதாகக் குறிப்பிட்டார்.
செங்கல்பட்டு மற்றும் குன்னூரில் தடுப்பூசிகளைத் தயாரிப்பது குறித்தும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்த இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Comments