10 லட்சம் மாமூல் கேட்டு ரவுடி கும்பல் அட்டகாசம்..! ஆடியோ லீக்கானதால் ஆவேசம்
சாத்தான்குளம் அருகே 10 லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு கொடுக்க மறுத்ததால் சோலார் பேனல்களை அடித்து உடைத்ததாக 9 பேரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள உடையார்குளம் பகுதியில் PIONEER WINCON என்ற நிறுவனத்தின் சார்பில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய சோலார் பவர் பிளாண்ட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதே பகுதியைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் சோலார் பவர் பிளாண்ட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 9 பேர் இணைந்து சோலார் பவர் பிளான்ட் பணி நடைபெறும் இடத்திற்கு செவ்வாய் காலை சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
அங்கிருந்த நிறுவன ஊழியர்களிடம் , நீங்கள் வெளியூரிலிருந்து எங்கள் பகுதிக்கு வந்து தொழில் செய்ய வருகிறீர்கள் எனவே எங்களுக்கு கப்பம் கட்ட வேண்டும் எனவும் தங்களுக்கு 10 லட்சம் ரூபாய் மாமூலாக தர வேண்டும் இல்லை எனில் நீங்கள் எப்படி தொழில் செய்கிறீர்கள் என பார்ப்போம் என மிரட்டியதாகவும், அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் தனது செல்போன் நம்பரையும் கொடுத்துச் சென்றதாகவும், சொல்லப்படுகிறுது.
நிறுவன ஊழியர் ஒருவர் சுரேஷை தொடர்பு கொண்டு பேசிய போது, தங்களுக்கு பணம் தர வேண்டும் எனக் கூறியதாகக் கூறப்படுகிறது. தாங்கள் கேட்ட பணத்தை தரவில்லை எனில் எப்படி தொழில் செய்கிறீர்கள் என பார்ப்போம் என்று ,சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் நிறுவன ஊழியர்களை மிரட்டி பேரம் பேசும் ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில் அங்கு வந்த சுரேஷ் உள்ளிட்ட 9 பேரும் நிறுவனத்தினர் பணம் தராத ஆத்திரத்தில், அங்கிருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான சோலார் பேனல்கள், டிரான்ஸ்பார்மர், மின்சார உபகரணங்கள் உள்ளிட்டவற்றை அடித்து உடைத்து சென்றதாக சொல்லப்படுகிறது.
மேலும் அங்கு நின்று கொண்டிருந்த பணியாளர்களின் வாகன இரு சக்கர வாகனங்களையும், அவர்கள் தங்கி ஓய்வெடுக்கும் அறையையும், சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றதாக கூறப்படுகின்றது. இந்த தாக்குதல் சம்பவத்தால் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அனைவரும் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓட்டம் பிடித்ததாக, சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து நாசரேத் போலீசார் வெள்ளூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம் பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக, தனியார் நிறுவனங்கள் புதிய நிறுவனங்களை தொடங்கி முதலீடு செய்து வரும் சூழ்நிலையில், இத்தகைய மாமூல் ரவுடிகளின் மிரட்டல் மற்றும் தாக்குதலால் முதலீட்டாளர்கள் அச்சம் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்றவர்கள் மீது காவல்துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Comments