கொடூர கொலை கும்பலுக்கு உதவினாரா பெண் சப் - இன்ஸ்பெக்டர் ? சடலத்தை வாங்க மறுப்பு

0 5117
கொடூர கொலை கும்பலுக்கு உதவினாரா பெண் சப் - இன்ஸ்பெக்டர் ? சடலத்தை வாங்க மறுப்பு

திருநெல்வேலி அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கணவனின் சடலத்தை வாங்க மறுத்து, மனைவி 4ஆவது நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றார்.

திருநெல்வேலி மாவட்டம் வடக்கு தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் 35 வயதான கண்ணன். இவர் சிறிய அளவிலான வீடுகளை ஒப்பந்த அடிப்படையில் கட்டிகொடுக்கும் பணிசெய்து வந்தார். இவருக்கு புனிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி காலை, 2 நாட்களாக தான் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்பதால் தண்ணீர் எடுப்பதற்காக கட்டிட பணிகளுக்கு பயன்படுத்த வைத்திருந்த லோடு ஆட்டோவில் ஓட்டுநருடன் தாழையூத்து அருகே உள்ள பண்டாரகுளம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தண்ணீர் பிடித்துகொண்டிருந்த போது, 3 இரண்டுசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இளைஞர் கண்ணனை சரமாரியாக வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகின்றது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தாழையுத்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினரால் கொலையாளிகளை பிடிக்க இயலவில்லை. இந்நிலையில், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி, 3 பேர் செங்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதற்கிடையே இந்த சம்பவத்தை கண்டித்தும் உண்மை கொலையாளிகளை கைது செய்யக்கோரியும் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொலையான கண்ணனின் சடலத்தை பிணகூறாய்வு நடத்தி குடும்பத்தினரிடம் ஒப்படைக்க போலீசார் வேகம் காட்டிய நிலையில் கணவரின் கொலையில் தொடர்புடைய உண்மையான கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் கொலையாளிகளுக்கு தனது கணவரை அடையாளம் காட்டி கொலைக்கு, சாதி ரீதியாக உடந்தையாக இருந்த தாழையூத்து காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் அவரது மனைவி புனிதா அந்த ஊர் மக்களுடன் 4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றார்.

எந்த ஒரு குற்றவழக்கும் இல்லாமல், நியாயமாக உழைத்து சம்பாதித்து வந்த தனது கணவர் கொல்லப்பட்டதால் வாழ்வாதரத்தை இழந்து நிற்கதியாய் தவிக்கும், தனக்கு உரிய நீதி வழங்க வழங்க வேண்டும் அதுவரை தனது கணவரின் உடலை வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ள புனிதா 4ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அந்த ஊரில் இருந்து எவரும் வெளியேறி விடாதபடி ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

கொலைக்கு உடந்தை என்று புகார் கூறப்படும் பெண் உதவி ஆய்வாளர் மீதான குற்றச்சாட்டு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் கேட்ட போது, இந்த புகார் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டதாகவும், அந்த பெண் உதவி ஆய்வாளருக்கும் கொலையாளிகளுக்கும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பதை தவிர இருவருக்குள்ளும் எந்த தொடர்பும் இல்லை என்றும், பெண் உதவி ஆய்வாளர் மீது உள் நோக்கத்தோடு புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து காவல்துறையினர் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments