கேரளப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: பழனியில் தீவிரமடையும் விசாரணை

0 5713

ழனி முருகன் கோவிலுக்கு வந்த கேரள பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் உண்மைத் தன்மை குறித்து அறிய, 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாக, திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ரவளி பிரியா தெரிவித்துள்ளார்.

பழனி முருகன் கோயிலுக்கு கடந்த மாதம் 19-ஆம் தேதி வழிபாட்டுக்காக வந்த கேரளத்தை சேர்ந்த 40 வயது பெண், 3 பேர் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. கூட்டு பாலியல் வன்கொடுமை குறித்து பழனி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் அதை வாங்க காவல்துறையினர் மறுத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சம்மந்தப்பட்ட பெண் கேரளத்தில் அளித்த புகாரில் கண்ணூர் மாவட்டம் தலசேரி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து டிஜிபிக்கு வாட்ஸ்அப் மூலம் வந்த புகாரின் அடிப்படையில், பழனி அடிவாரம் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டு, பெண் ஆய்வாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளி பிரியா, பழனிக்கு வந்து நேரில் விசாரணை நடத்தினார்.

குற்றம் நடந்ததாக கூறப்படும் அடிவாரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட போலீசார் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர், பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து, நடந்த சம்பவம் குறித்து விசாரித்தார். கேரளாவிற்கும் போலீசார் சென்று, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடன் வந்த ஆணிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

குற்றச்சாட்டு கூறிய பெண்ணும், அவருடன் வந்த நபரும் கணவன்-மனைவியா என்பது குறித்தும் விசாரிக்கப்படுவதாக எஸ்.பி. ரவளிபிரியா தெரிவித்தார். சம்மந்தப்பட்ட பெண் தங்கியிருந்த விடுதி உரிமையாளருக்கு 3 தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், கேட்ட பணத்தை தராவிட்டால் வழக்கில் சிக்க வைத்து விடுவோம் என மிரட்டப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும் கண்கூடான சாட்சிகள், தொலைபேசி அழைப்புகள், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, உண்மைத் தன்மையை நிலைநாட்டுவோம் என எஸ்.பி. ரவளிபிரியா கூறினார்.

காவல்நிலையங்களில் புகார்கள் வாங்க மறுக்கப்பட்டால், தான் உள்ளிட்ட உயரதிகாரிகளின் எண்கள் ஒவ்வொரு காவல்நிலையத்தில் பிளக்ஸ்போர்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த எண்களுக்கு உடனடியாகத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் எஸ்.பி. பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments