ஆட்டோ ஓட்டுநரிடம் ஐபோனா ? ஐபோனை பறித்த ஏட்டு - உயிரைவிட்ட ஆட்டோ ஓட்டுநர்

0 6002

சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வைத்திருந்த ஐபோனை சந்தேகத்தின் பேரில் தலைமைக் காவலர் ஒருவர் பிடுங்கியதால், விரக்தியடைந்த ஆட்டோ ஓட்டுநர் உடைந்த பீர் பாட்டிலால் கழுத்தை அறுத்துக் கொண்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பாக்கியராஜ். திங்கட்கிழமை மதியம் தன்னுடைய நண்பர் பிரதீப் என்பவருடன் அங்குள்ள ஏரிக்கரையில் ஆட்டோவை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக திருமுல்லைவாயல் காவல் நிலைய தலைமைக் காவலர் சந்தோஷ் என்பவர் ரோந்து வந்துள்ளார்.

பாக்கியராஜையும் பிரதீப்பையும் பார்த்து சந்தேகமடைந்த அவர், யார் என்ன என விசாரித்துவிட்டு அவர்களுடைய செல்போன்களை கேட்டு வாங்கியுள்ளார். அதில் பாக்கியராஜ் வைத்திருந்தது ஐபோன் என்று கூறப்படுகிறது. ஆட்டோ ஓட்டுபவரிடம் எப்படி ஐபோன் இருக்க முடியும் என தலைமைக் காவலருக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும் எனவே ஐபோனை காவல் நிலையம் வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறிவிட்டு தலைமைக் காவலர் சந்தோஷ் அங்கிருந்து செல்ல முயன்றதாகவும் சொல்லப்படுகிறது.

செல்போனைப் பிடுங்கிய ஆத்திரத்தில் தலைமைக் காவலரிடம் பாக்கியராஜ் வாக்குவாதத்தில் ஈடுபடவே, அவரை தலைமைக் காவலர் சந்தோஷ் ஓங்கி அறைந்ததாகக் கூறுகிறார் பாக்கியராஜின் நண்பர் பிரதீப். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பாக்கியராஜ், கீழே கிடந்த காலி பீர் பாட்டில் ஒன்றை எடுத்து உடைத்து, போனை கொடுக்கவில்லை என்றால் கழுத்தை அறுத்துக் கொள்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் அவர் விளையாட்டுக்குக் கூறுவதாக நினைத்து "நீ சரியான ஆம்பளையா இருந்தா கழுத்தை அறுத்துக்கோடா” என தலைமைக் காவலர் சந்தோஷ் கூறியதாகவும் அடுத்த விநாடி பாக்கியராஜ் பாட்டில் துண்டால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டதாகவும் கூறுகிறார் பிரதீப்.

பாக்கியராஜின் இந்த செயலை எதிர்பாராத தலைமைக் காவலர் சந்தோஷ் இருவரது செல்போனையும் தூக்கிப் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவரது பைக் சாவியை தாம் பறித்துவைத்துக் கொண்டதாகக் கூறுகிறார் பிரதீப். பிறகு தலைமைக் காவலர் சந்தோஷையும் ஆட்டோவில் உட்கார வைத்துக் கொண்டு பாக்கியராஜை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும் அங்கிருந்து ஏட்டு சந்தோஷ் நைசாக நழுவி இருக்கிறார். பாக்கியராஜை மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே அவர் உயிரிழந்திருக்கிறார்.

சம்பவம் தொடர்பாக தலைமைக் காவலர் சந்தோஷிடம் அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் மகேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments