பழங்கால கோட்டையில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த 11 பேர் மின்னல் தாக்கி பலி
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே, பழங்கால கோட்டையில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த 11 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் ஒரே நாளில் மின்னல் தாக்கி மொத்தம் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே அமைந்துள்ள அமர் அரண்மணை, 12ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். நேற்று மாலை, மழை பெய்துகொண்டிருந்த நிலையில், கோட்டை மற்றும் அரண்மனையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சுமார் 27 பேர் அங்குள்ள கோபுரம் ஒன்றில் இருந்துள்ளனர்.
பலர் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த வேளையில் மின்னல் தாக்கியுள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். மின்னல் தாக்கியவுடன் சிலர் அச்சத்தில் கீழே குதித்து காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுதவிர, ராஜஸ்தானில் மேலும் 9 பேர் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
7 சிறார்கள் உள்ளிட்ட 20 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்திலும் பல்வேறு பகுதிகள் மழைப்பொழிவை பெற்ற நிலையில், மாநிலம் முழுவதும் மின்னல்தாக்கிய வெவ்வேறு சம்பவங்களில் மொத்தம் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல மத்தியப் பிரதேசத்திலும் மின்னல் தாக்கிய சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Comments