மேகதாது விவகாரம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மேகதாது திட்டத்திற்கு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட 3 தீர்மானங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை மத்திய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, சட்டமன்ற அனைத்துக் கட்சிகளின் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன்அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப்பணியையும்மேற்கொள்ளக்கூடாது என்றும், அதைமீறி, அணைகட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான இத்தகைய முயற்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவால் என்றும், கர்நாடக அரசின் திட்டத்திற்கு, மத்திய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், தீர்மானங்களை மத்திய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது என்றும், அதன்பிறகு, சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
Comments