மைத்துனிக்கு வைத்த குறி... ஒன்றரை வயது பிஞ்சின் உயிரைப் பறித்தது... குடிபோதையால் அரங்கேறிய பயங்கரம்

0 5145

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே வேலைக்குப் போகச் சொல்லி வற்புறுத்திய மைத்துனியின் தலையில் கல்லைப் போட்டு கொல்ல முயன்ற நபர், தவறுதலாக அவர் அருகில் படுத்திருந்த ஒன்றரை வயது குழந்தையைக் கொன்ற கொடூரம் அரங்கேறி இருக்கிறது.

இராணிப்பேட்டை மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான கனிமொழி, பிரசவத்துக்காக தனது ஒன்றரை வயது மகன் கபிலேஷுடன் சிறுவளையம் கிராமத்திலுள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். 

சனிக்கிழமை இரவு 11 மணிக்கு திடீரென குழந்தை வீறிட்டு அழும் சப்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது, பின்னந்தலையில் அடிப்பட்டு ரத்தம் வெளியேறியவாறு இருந்திருக்கிறது. உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. குழந்தை இறந்து கிடந்த இடத்தில் பெரிய கல் ஒன்று கிடந்திருக்கிறது.

விசாரணையில் கனிமொழியின் அக்கா கணவன் பிரசாந்த் வேலைக்குப் போகாமால், மாமியார் வீட்டிலேயே தங்கி குடித்துவிட்டு நாள்தோறும் கலாட்டா செய்து வந்துள்ளான். அவனை கனிமொழியின் தங்கை கார்த்திகா கண்டித்து வந்துள்ளார். அக்காள் கணவன் என்றும் பாராமல் தன்னை அவ்வப்போது அவமானப்படுத்தி வந்த கார்த்திகா மீது கடும் கோபத்தில் இருந்திருக்கிறான் பிரசாந்த்.

சனிக்கிழமையும் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டவனை கார்த்திகாவும் கனிமொழியும் சேர்ந்தே கண்டித்துள்ளனர். போதையின் உச்சத்தில் கார்த்திகாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளான். இரவு கனிமொழியும் கார்த்திகாவும் குழந்தை கபிலேஷை பக்கத்தில் கிடத்தி அருகருகே தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர்.

கார்த்திகாவின் தலையில் கல்லைப் போட்டு கொல்லும் நோக்கில் வாசலில் இருந்த கருங்கல்லை தூக்கி வந்த பிரசாந்த், போதையில் தடுமாறி கல்லை கீழே போட்டிருக்கிறான். அந்தக் கல் உருண்டு சென்று தூங்கிக் கொண்டிருந்த பிஞ்சுக் குழந்தையின் தலையில் பட்டு குழந்தை வீறிட்டு கத்தியிருக்கிறது.

சத்தம் கேட்டு கனிமொழியும் கார்த்திகாவும் எழுந்து மின்விளக்கைப் போடுவதற்குள் இருட்டில் ஓடி மறைந்த பிரசாந்த், காலை எங்கிருந்தோ வந்து, ஒன்றும் தெரியாதவன் போல் கூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியமாகி இருக்கிறான். பிரசாந்த்தை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொறுப்பற்ற முறையில் ஊர் சுற்றித் திரிந்தவனின் பழிவாங்கும் புத்திக்கு ஒன்றரை வயது பிஞ்சுக் குழந்தை பலியாகி இருப்பது அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments