சமுதாயத்தின் அடிமட்டத்தில் தொண்டாற்றுபவர்களையும் பத்ம விருதுகளுக்குப் பரிந்துரைக்கலாம் - மக்களுக்குப் பிரதமர் அழைப்பு
சமுதாயத்தின் அடிமட்டத்தில் தொண்டாற்றுபவர்களைப் பத்ம விருதுகளுக்குப் பரிந்துரைக்கும்படி பொதுமக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், தொழில்துறை ஆகியவற்றில் சிறப்பாகப் பங்காற்றியவர்களுக்கு இந்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் குடியரசு நாளில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளையும் விண்ணப்பங்களையும் செப்டம்பர் 15 வரை இணையத்தளத்தில் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமுதாயத்தின் அடிமட்டம் வரை தொண்டாற்றுவோரை அடையாளம் கண்டு விருதுகளுக்குப் பரிந்துரைப்பதற்காக அரசும் ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், தொண்டு செய்து மக்களின் மனங்களைக் கவர்ந்தவர்களைப் பத்ம விருதுகளுக்குப் பரிந்துரைக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் திறமையானவர்கள் பலர் உள்ளதாகவும், அடிமட்டத்தில் தொண்டாற்றி வரும் அவர்கள் குறித்துக் கண்டும் கேட்டும் ஈர்க்கப்பட்டிருந்தால் அவர்களைப் பத்ம விருதுகளுக்குப் பரிந்துரைக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பரிந்துரைக்க வேண்டிய இணையத்தளத்தின் இணைப்பையும் பதிவிட்டுள்ளார். இந்த ஆண்டு ஜனவரியில் மனத்தின் குரல் உரையாற்றிய பிரதமர், விளம்பரமில்லாமல் தன்னலமின்றித் தொண்டாற்றி வருவோரைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது குறிப்பிடத் தக்கது.
Comments