மனைவியைக் கொன்ற கணவன்..! தற்கொலை போல் அரங்கேற்றிய நாடகம்…

0 7345
மனைவியைக் கொன்ற கணவன்..! தற்கொலை போல் அரங்கேற்றிய நாடகம்...

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே தனிக்குடித்தனம் போக வற்புறுத்திய காதல் மனைவியை கொலை செய்துவிட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டது போல் நேர்த்தியாக செட்டப் செய்து நாடகமாடிய கணவன் போலீசில் சிக்கினான்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த பொத்தனூரைச் சேர்ந்த சர்மிளாதேவி என்ற பெண், கடந்த 6ஆம் தேதி கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை கொடுத்த புகாரில் கணவர் கபிலேஷ்ராஜனை விசாரித்தபோது, மனைவியைக் கொன்றதை ஒப்புக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

கரூரில் பேக்கரி நடத்தி வரும் கபிலேஷ்ராஜனின் தந்தை 11 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, தாய் மற்றும் திருமணமாகாத தங்கையுடன் பொத்தனூரில் வசித்து வந்துள்ளார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சர்மிளா தேவியை காதலித்து திருமணம் செய்து கையில் 8 மாத பெண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் தனிக்குடித்தனம் செல்ல சர்மிளா தேவி வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. தந்தை இல்லாத நிலையில், தாயையும் தங்கையையும் தனியே விட்டுவிட்டு தனிக்குடித்தனம் செல்ல விரும்பாத கபிலேஷ்ராஜனுக்கும் சர்மிளாதேவிக்கும் இடையே கடந்த 4 மாதங்களாகவே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.

கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ற மனைவியை கடந்த 26ஆம் தேதிதான் சமாதானம் செய்து அழைத்து வந்துள்ளான் கபிலேஷ்ராஜன்.

மீண்டும் தனிக்குடித்தனம் தொடர்பான சண்டை எழவே, மனைவியை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறான் கபிலேஷ்ராஜன். சம்பவத்தன்று அதிகாலை 4 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டது போல் சித்தரிக்க, கத்தியைக் கொண்டு இடது கை மணிக்கட்டை ஆழமாக அறுத்திருக்கிறான்.

பின்னர் 5 மணிக்கெல்லாம் பேக்கரிக்குக் கிளம்பிச் சென்றவன், காலை 9 மணிக்கு மேல் 2 முறை தங்கைக்கு போன் செய்து படுக்கையறையிலிருந்து மனைவி வெளியே வந்து விட்டாரா எனக் கேட்டிருக்கிறான். சர்மிளாதேவி வெளியே வராததால் சந்தேகமடைந்த கபிலேஷ்ராஜனின் தாய், படுக்கையறையில் சென்று பார்த்தபோது, ரத்தவெள்ளத்தில் அவர் மயங்கிக் கிடப்பதாக நினைத்து மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.

அவர் இறந்துவிட்டதாக தெரிவித்த தனியார் மருத்துவமனையினர், உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். பிரேதப் பரிசோதனையில் உண்மை தெரிந்துவிடும் என்று எண்ணிய கபிலேஷ்ராஜன், விரைந்து சென்று அரசு மருத்துவமனைக்கு வெளியே ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த மனைவியின் உடலை தனது காரில் ஏற்றி வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளான் கபிலேஷ்ராஜன் என்கின்றனர் போலீசார்.

கபிலேஷ்ராஜனின் வாக்குமூலத்தின்படி அவனை போலீசார் கைது செய்த நிலையில், திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால், சார் ஆட்சியர் தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments