ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்
முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அதிமுக சார்பில் வெற்றிபெற்றவர் தோப்பு வெங்கடாசலம். இவர் ஜெயலலிதா அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் சுயேச்சையாகப் போட்டியிட்டார். இதற்காகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தோப்பு வெங்கடாசலம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது பழக்கதோஷத்தில் ஈரோடு மாவட்டத்தை அதிமுகவின் கோட்டையாக மாற்றுவோம் எனக் கூறியவர், பின்னர் சுதாரித்துக் கொண்டார்.
நாமக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரமும் அதிமுகவில் இருந்து விலகித் தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
Comments