தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் - மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி

0 3669
தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் - மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி

தமிழ்நாட்டுக்கு கூடுதல் தடுப்பூசிகள் வேண்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விடுத்த வேண்டுகோளை ஏற்று, கூடுதல் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு அமைந்த பின் முதன்முறையாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி சென்றார். அங்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ்நாடு அரசு எடுத்த கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து விளக்கினார்.

தொடர்ந்து பிரதமர் மோடியைச் சந்தித்த ஆளுநர், மாநிலத்துடன் தொடர்புள்ள முக்கியப் பிரச்னைகள் மற்றும் தமிழ்நாட்டு வளர்ச்சி பற்றியும் விவாதித்தார். தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியாவையும் ஆளுநர் பன்வாரிலால் சந்தித்துப் பேசினார்.

அப்போது தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் தேவைப்படுவதாக ஆளுநர் விடுத்த கோரிக்கையை ஏற்ற அமைச்சர் மன்சுக் மண்டவியா, தமிழ்நாட்டுக்கு கூடுதல் டோஸ் தடுப்பூசிகளை வழங்குவதாக உறுதியளித்தார்.

தொடர்ந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த ஆளுநரை புதிதாகப் பொறுப்பேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில் சென்னை மாநகரின் 45 சிறப்பு முகாம்களிலும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, கடந்த 2 நாட்களாக தடுப்பூசி மையங்கள் இயங்க வில்லை.

இந்த சூழலில், புனேவில் இருந்து பெங்களூரு வழியாக சென்னை விமான நிலையத்திற்கு, 42 பார்சல்களில் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன. எனவே, இன்று சென்னை மாநகரில் 13 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments