கூடுதல் கட்டணத்திற்கு ஓலா கால்டாக்ஸியில் சிறைவைக்கப்பட்ட பயணி..!
சென்னையில் இரவு நேரத்தில் ஓலா கால்டாக்ஸியில் மருத்துவமனை செல்வதற்காக ஏறிய வாடிக்கையாளரிடம் கூடுதல் பணம் கேட்டு டாக்ஸியிலேயே சிறைவைத்ததாக ஓட்டுனர் மீது புகார் எழுந்துள்ளது. ஓட்டுனருக்கும் ஓலா நிறுவனத்துக்கும் உள்ள கமிஷன் பஞ்சாயத்தில் வாடிக்கையாளர் சிக்கியது குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த முரளி என்பவர் குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது நண்பரை உடனிருந்து கவனிப்பதற்காக ஓலா கால் டாக்ஸி முன்பதிவு செய்துள்ளார். அவரது சவாரி அழைப்பை ஏற்று வந்த ஓலா கால் டாக்ஸி ஓட்டுனரோ, முரளியை ஏற்றிக் கொண்டதும், சிஸ்டத்தில் வரும் கட்டணத்தை விட 70 ரூபாய் கூடுதலாக தருவதாக ஒப்புக் கொண்டால் டாக்ஸியை எடுக்கிறேன் இல்லையென்றால் இங்கேயே இறக்கி விட்டு செல்கிறேன் எனகூறியுள்ளார்.
மருத்துவமனைக்கு செல்லும் அவசரத்திலும், வேறு வாகனம் இல்லாததாலும், முரளியும் அதற்கு ஒப்புக் கொண்டதாக கூறப்படுகின்றது. 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த மருத்துவமனையை கார் சென்றடைந்ததும், வழக்கமான கட்டணத்தைவிட இரவு நேரக் கட்டணம் என்ற வகையில் 252 ரூபாய் பில் வந்துள்ளது. உடனே முரளி 300 ரூபாய் கொடுத்து மீதி பணம் கேட்டுள்ளார். ஆனால் ஓலா ஓட்டுனரோ தான் முன் கூட்டியே பேசியபடி 70 ரூபாய் கூடுதலாக வேண்டும் என்றும், தற்போது 300 ரூபாய் கொடுத்துள்ளதால் மேலும் 20 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது
முதலில் சொன்னபடி மீதமுள்ள 20 ரூபாய் தந்தால் இறக்கி விடுவேன் இல்லையென்றால் இறக்க மாட்டேன் எனக்கூறி ஓட்டுனர் வம்படியாக முரளியிடம் கெடுபிடிகாட்டியுள்ளார்
ஒரு கட்டத்தில் இந்த சவாரிக்கு வந்ததால் தனக்கு கிடைப்பது 156 ரூபாய் மட்டுமே என்றும் தற்போதுள்ள பெட்ரோல் விலைக்கு இந்த கட்டணத்தில் காரை ஓட்ட இயலாது என்பதால் ஓலா நிறுவனத்திடம் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி பலனில்லை என்றும் அவனுங்க கமிஷன் ஏற்றி தருவது போல தெரியவில்லை அதனால் ஒவ்வொரு சவாரிக்கும் 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பது என தாங்களே முடிவு செய்து விட்டதாக அந்த ஓட்டுனர் தெரிவித்தார்
20 ரூபாய்க்காக , சுமார் அரை மணி நேரமாக காருக்குள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் தவித்த முரளி, ரோந்து போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார், போலீசார் அறிவுறுத்திய பின்னரும் அவருக்கு மீதி பணத்தை கொடுக்காமல் முரளியைமட்டும் ஒரு இடத்தில் இறக்கிவிட்டு அந்த ஓட்டுனர் காருடன் சென்று விட்டதாக தெரிவிக்கும் முரளி,முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் வாடகை கால்டாக்ஸி ஓட்டுனர்கள் முக்கியமானவர்கள். காருக்கு கட்டவேண்டிய தவணைத் தொகை, காப்பீடுத் தொகை, சாலை வரி, எல்லாவற்றுக்கும் மேலாக பெட்ரோல் விலை உயர்வு இவற்றுக்கிடையே தங்கள் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் என கால்டாக்ஸி ஓட்டுனர்கள் பெரும் போராட்டத்தை சந்தித்து வருகின்றனர்.
ஓலா நிறுவனம் ஓட்டுனர்களுடன் கலந்து பேசி அவர்களுக்கு உரிய பங்கை உயர்த்திக் கொடுத்தால் வாடிக்கையாளரிடம் ஓட்டுனர் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டிய அவசியமும், வீண்சச்சரவுகளும் ஏற்படாது என்பதே உண்மை..!
Comments