தென் மாவட்டங்களை குறி வைக்கும் ஏடிஸ்: டெங்கு - கொரோனா ஒரே அறிகுறி?

0 4532

டெங்கு, சிக்குன்குனியா, சிகா வைரஸ்களை பரப்பும் ஏடிஸ் வகை கொசு தென்மாவட்டங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்படும் டெங்கு, கொரோனா பாதிப்புகளை எப்படி வேறுபடுத்தி அறிவது என விளக்கும் செய்தித் தொகுப்பு...

கொரோனா இரண்டாவது அலை தணிந்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை, தேங்கும் நீரில் கொசு உற்பத்தி என அடுத்த கட்ட சுகாதாரப் பிரச்சனைகள் தலைதூக்கியுள்ளன. கடந்த ஆண்டில்  2 ஆயிரத்து 410 பேருக்கு டெங்கு உறுதியான நிலையில், நடப்பாண்டில் முதல் ஆறு மாதத்திலேயே 2 ஆயிரத்து 90 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தேனி, தென்காசி மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில்தான்  டெங்கு பாதிப்பு அதிகம். இந்நிலையில், டெங்குவுக்கு கொரோனாவுக்கும் பெரும்பாலும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருக்கும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உடல் சோர்வு, வலி, காய்ச்சல், ஆகியவை இரண்டு நோய்களுக்கும்  தென்படும். டெங்குவை போல் இல்லாமல், கொரோனா  பாதித்தவர்களுக்கு மூன்றாவது நாள் முதல் அதிக இருமல் காணப்படலாம். ஆனால் டெங்குவில் இருமல் அதிகமாக இருக்காது. டெங்கு நோயாளிகளுக்கு கண்களுக்கு பின்னாலும், நெற்றிப் பகுதியிலும் வலி இருக்கலாம்.

டெங்கு நோயாளிகளுக்கு ரத்தம் உறையும் தன்மை குறையும். இதனால் ஈறுகளில் ரத்தம் கசியலாம். இந்த அறிகுறிகள் கொரோனா நோயாளிகளுக்கு இருக்காது. அதேபோன்று டெங்கு நோயாளிகளிடம் ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கையும் குறைந்து காணப்படும்.

டெங்கு மற்றும் கொரோனா பாதிப்பின், பொதுவான சில அறிகுறிகளை பிரித்தறிவது சவாலானது என்பதால், மூன்று நாட்கள் தொடர்ந்து அறிகுறிகள் இருந்தால் உடனே அரசு மருத்துவரை அணுகுவது அவசியம் என்கின்றனர் மருத்துவதுறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments