பழங்கள் வடிவில் வரும் எமதர்மன்.. நல்ல பழத்தை வாங்குவது எப்படி?

0 48515
பழங்கள் வடிவில் வரும் எமதர்மன்.. நல்ல பழத்தை வாங்குவது எப்படி?

வியாபார நோக்கத்திற்காக செயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழங்களால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்தும், நாம் பழங்கள் வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

பருவநிலைக்கு ஏற்ப விளையும் பழங்களை, இயற்கையாக பழுக்கும் வரை காத்திராமல், வியாபார நோக்கத்திற்காக சிலர் முன்னதாகவே பறித்து கால்சியம் கார்பைடு கற்களை வைத்து பழுக்க வைக்கின்றனர். இவ்வாறு பழுக்க வைக்கப்படும் பழங்கள் மணம், குணம், சுவை அனைத்தையும் இழந்து நிறம் மட்டும் பளபளப்பாக காணப்படும்.

கார்பைடு கற்களில் இருக்கும் ஆர்செனிக், பாஸ்பரஸ் என்ற இரண்டு வேதிப் பொருட்களும் உடலில் வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்படுத்துவதோடு, உடலை பலவீனம் அடையச் செய்யும்.

உடலில் திசுக்களுக்கு செல்லும் ஆக்சிஜன் தடை படுவதோடு, நாளடைவில் நரம்பு மண்டலத்தை பாதித்து தூக்கமின்மை, தலை சுற்றல், ஞாபக மறதி என கடைசியில் புற்றுநோயை உண்டாக்கும் என்கின்றனர் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

தற்போது மாம்பழ சீசன் எனும் நிலையில் காணும் இடங்களிலெல்லாம் மாம்பழக்கடைகள் முளைத்துள்ளன. கார்பைடு கற்களால் பழுக்க வைக்கப்படும் மாம்பழத்தின் தோல் சுருக்கம் இல்லாமல், பளபளப்பாக இருக்கும். நல்ல கனமாகவும், தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்திலும், தோலை நீக்கிப் பார்த்தால் உள்ளே செங்காயாக இருக்கும். இப்படியாக செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை மக்கள் கண்டறிய முடியும். இதேபோன்று, செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட வாழை பழத்தின் காம்பு பச்சை நிறமாகவும், பழத்தில் எந்தவித புள்ளியோ, சொரசொரப்போ இல்லாமல் பளீரென்று காணப்படும்.

பொதுவாக குறிப்பிட்ட அளவு எத்திலின் வாயுவை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைக்க உணவுபாதுகாப்புத்துறை அனுமதி அளித்துள்ளது. அவ்வாறு பழுக்க வைக்க அதிகபட்சம் 48மணி நேரம் வரை ஆகும். இந்த நேரம் கூட காத்திராமல் சிலர் வியாபரா நோக்கத்திற்காக கார்பைடு கற்களை வைத்து பழுக்க வைப்பது உடலுக்க தீங்கை உண்டாக்கும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். இதனால், மக்கள் விழிப்புணர்வோடு செயல்பட்டு, இயற்கையாக பழுக்க வைத்த பழங்களை கண்டறிந்து வாங்கி நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். அதேசமயம், செயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழங்களை விற்பனைக்கு கொண்டுவருவதை தடுக்க கண்காணிப்பையும், நடவடிக்கையும் அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments