தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு எவை எவைக்கு புதிதாக அனுமதி ?
தமிழ்நாட்டில் தளர்வுகள், கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணி வரை கடைகளை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கான பேருந்துசேவை, மத்திய-மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத்தேர்வுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, நோய்கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
ஏற்கனவே இரவு 8.00 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள், திங்கட்கிழமை முதல் இரவு 9.00 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள், தேநீர்கடைகள், அடுமனைகள் (Bakery), நடைபாதைக்கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள் வழக்கமான நிபந்தனைகளுக்குட்பட்டு 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும், புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடங்கப்படுகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த விவரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கவேண்டும்.
நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இறுதிச்சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
அதேசமயம், திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல்குளங்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்களுக்கு தடை தொடர்கிறது.
புதுச்சேரி நீங்கலாக, மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்துக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்துக்கும் தடை தொடர்கிறது.
கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கைசுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
குளிர்சாதனவசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூகஇடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரேநேரத்தில் அதிகப்படியான நபர்களைஅனுமதிக்கக்கூடாது. கடைகளின் நுழைவுவாயிலில்பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
கொரோனா தடுப்பு விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் நடவடிக்கைகளுக்கு முழுஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments